வியாழன், 19 மே, 2011

தணிக்கை மீறும் உணர்வுகளின் புனைவு வெளி _ அசதா


’காட்டின் பெருங்கனவு’ தொகுப்பு,அதன் கதைகளில் சந்திரா படைத்துதரும் பெண்களின் பருண்மையுலகும் மரபான சமரசங்கள் கொண்டு கட்டப்படாத அவர்களின் அகவுலகும் சமகால தமிழ்ச்சிறுகதை வெளியில் இதுவரை காணாத சில திறப்புகளைக் கொண்டு விளங்குவதனை முன்னிட்டு ஒரு முக்கியத் தொகுப்பாக அமைகிறது. புனைவின் பொதுவளியில் பெண் கதை மொழிதல் என்பதன் வழமைகளும் மறுப்புகளும் மீறப்படுதலில் தொடங்கி,பெண்ணிய கருத்தாக்கங்களை மீட்டுருவாக்கம் செய்வது வரையிலான எழுத்துக்களை நாம் தொடர்ந்து கண்டு வரும்போதும் பெண் புனைகதையாளர்களது எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாக நிற்கையில் மிக சுருங்கியது எனச் சொல்லத்தக்கதான என் வாசிப்பு வெளி அம்பை, லதா ராமகிருஷ்ணன்(அனாமிகா),உமா மகேஸ்வரி,சு.தமிழ்ச்செல்வி,சந்திரா,உமா ஷக்தி என்பதான வெகு சில பெயர்களையே உள்ளடக்கியதாய் இருக்கிறது.பரந்த வாசிப்பனுபவம் உடைய வொருவரும் இப்பட்டியலோடு ஒன்றோ அல்லது இரண்டோ பெயர்களை இணைக்குமளவிலேயே நம் சூழலின் யதார்த்தம் அமைந்திருக்கிறது என்பது என் துணிபு. இப்பின்னணியைக் கருத்தில் கொள்கையில் சந்திராவின் ‘காட்டின் பெருங்கனவு’ தொகுப்பினை ஒரு முக்கிய வரவாக நாம் காணவேண்டியுள்ளதன் அவசியத்துக்கு இன்னும் வலு கூடுகிறது.
தலைப்புக் கதையான ’காட்டின் பெருங்கனவு’ குறிஞ்சி நிலக்காட்சிகளை பின்புலமாகக் கொண்டமைந்து,பதின்ம வயது பெண் மனதின் அசலான உணர்வுகளை மரபார்ந்த தணிக்கைகளுக்கு தொலைவே வைத்து புனைவாக்கிய வகையில் தொகுப்பில் சிறந்த கதையாக நிற்கிறது. கேரளத்தை ஒட்டிய மேற்கு மலைத்தொடரின் காட்சிகளும், நாம் அதிகம் அறிந்திறாத மிளகு பிடுங்குதல் போன்ற வாழ்வாதாரச் செயல்களும் ஊடுபாவிய ஒரு நிலவெளியில் தூரிகையால் தீட்டுவது போல கதை வளர்க்கப்படுகிறது. கதைப் பெண்ணின் தன்னிலை வழியாக விவரிக்கப்படும் காதலின் முகிழ்ப்பும்,தீவிரமும்,தவிப்பும்,பிரிவும் என கனவுத்தன்மை விலகாத காட்சிகள் வழி பெண்மையின் காதல் அபோதமானது, தத்துவம் மற்றும் தர்க்கங்களின் நிழல் கவியாத தூரத்தில் அப்படியே படைத்து தரப்படும் பாங்கில் தீர்க்கமும் வலுவானதொரு பிரதியாக இக்கதை இருக்கிறது. பிரிவின் தருணத்தில் அவளின் காதலை உணர்ந்துவிடும் பெரியம்மா கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமிலிருப்பது கதையின் போக்கில் உறுத்தலின்றி பதிவாகையில் காதல் குறித்த அசலானதொரு பெண்ணிய கருத்தாடல் இயங்கும் பிரதியாக இக்கதை முழுமை பெறுகிறது.
’காட்டின் பெருங்கனவு’ கதையின் பெண்ணைப் போன்றவளே ‘மருதாணி’. ஆனால் மருதாணியின் உள வேட்கையும் காதல் அபோதமும் சமூகத்தின் பின்னணியில் ’மருதாணி’ கூடுதலானதொரு அர்த்த பரிமாணத்தை பெறுகிறது. இவ்வேட்கையைப் பின்பற்றிச் செல்வதன் எல்லா எதிர்மறை விளைவுகளையும் அறிந்தவளான மருதாணி அவை பற்றி கவலை எதுவும் கொண்டவளாகத் தெரிவதில்லை. ‘காட்டின் பெருங்கனவு’ கதையின் பெரியம்மாவைப் போல மருதாணியின் அண்டையில் வசிக்கும் பெண்களும் அவளது அந்தரங்க காதலை அறிந்தும் அதன் எதிர்மறை விளைவுகள் பற்றி அறிவுரை சொல்வதோ அல்லது அவளை கேடானவளாக கருதி விலக்குவோ இல்லை என்பது இங்கு முக்கியமாகக் காணத்தக்கது. எந்த வகையானாலும் பெண்ணின் காதலென்பது ஒழுக்கக் கேடாகவும் மீறலாகவும் சமூக கட்டுமானம் இக்கதையை வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. திருமண உறவை தாண்டிய தன் காதலை-இக்காதல் உண்டாக்கி வளர்ந்த சம்பவப் பின்னணி மருதாணியின் தரப்பை நியாயம் செய்பவையாக அமைந்திருக்கின்றன-அடைய முனைவதான மருதாணியின் செயல்களில் துளியும் அச்சமோ குற்றவுணர்வோ இல்லையென்பதோடு தன் காதல் உணர்வின் உந்துதலைப் பின்பற்றி செல்லும் மருதாணி அதற்கான வசைகலையும் அடிகளையும் தாய்வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அவமானத்தையும்கூட தன் அந்தரங்க காதலோடு சேர்ந்து செயல்களாக கருதி இயல்புகாக்கிறாள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.சங்கப் பாடல்கள் தொடங்கி ஆண்டாள் வழியாக மேலை நவீன இலக்கியங்கள் வரை நாம் கண்டு வந்திருக்கும் காதல் மேலிட்ட பெண்களை ஒரு கணம் பழம் வார்ப்புகளாக தோன்றச் செய்வதான வலுவுடனும் புத்தாக்கத்துடனும் இப்பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஒருவர் கூறவியலும்.
பெண்ணின் அகமன வாதைகளைப் பேசும் கதைகளாக ‘பன்னீர் மரத்தெரு’, ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ ஆகிய கதைகள் அமைந்திருக்கின்றன. ஒரு கதை சொல்லியாக தனது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் தொலைக்காட்சி பெட்டியினால் மன சமநிலை குலையும் அகிலாவைப் பற்றி ‘பன்னீர் மரத்தெரு’ மனதோடு ஒன்றிய இயல்பான விசயங்களை துறந்து நவீன வாழ்வின் அர்த்தமற்ற ஜோடனைகளுக்கு தம்மை ஒப்புக் கொடுக்க முடியாதவர்களது- அதுவும் பன்னீர் பூக்களையும்,குழந்தைக் கதைகளையும் நேசிக்கும் தனிமை பீடித்த ஒரு பெண்ணின்- அகத்துயரம் பற்றியது. பெண்ணின் வாதைகள் கட்டமைக்கப்படும்விதம் ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ கதையில் சொல்லப்படுகிறது. கணவனது சுயநலத்துக்காக கவிதா திட்டமிட்டே பைத்தியமாக சித்தரிக்கப்படுகையில் உறவும்,சமூகமும்,நமது மருத்துவ முறைகளும் உதவி செய்ய அவள் நிஜமான பைத்திய நிலையைத் தொடர்கிறாள். சிறுநகரத்து மனநல மருத்துமனையில் தன்னைவிடவும் மோசமான நிலையில் காணப்படும் பெண்களை கண்டு பரிதாபப்படுபவளாக இருக்கும் கவிதா அவள் கணவனுக்கு வெறும் போக வஸ்து. தனது கள்ள உறவை கண்டு பிடித்துவிடும் அவளை பைத்திய பட்டமும் கட்டி பழி தீர்க்கிறான் கணவன். மாமியாரோ அவள் குழந்தையை அவளிடமிருந்தும் பறிக்கத் தீர்மானம் கொண்டவளாகயிருக்கிறாள். கவிதாவின் சித்தி கூட இரக்கப்படுவதைத்தாண்டி அவளை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இவ்வாறு எல்லாராலும் கைவிடப்பட்ட தனிமையின் பெருதுயர் சூழ அவள் நிஜமாகவே பைத்தியமாகிறாள். பெண்ணானவள் தனிமை, துயர் ஆகிய எந்தரக்கற்கள் கழுத்தில் கட்டப்பட்டு மாயும் யதார்த்த உலகின் ஒரு சிறு கீற்றாக இக்கதை பதிவு பெறுகிறது.
‘சூது நகரம்’, ’கழிவரை காதல் பிரதி’ கதைகள் நகர்சார்ந்த வாழ்வின் பின்னணியில் விளிம்பு மக்களை பேசும் வகையில் ஒன்றாக வைத்து பார்க்க வேண்டிய கதைகள். இரு கதைகளுமே ஒருவித இணைக்கோட்டு தன்மையான விவரிப்பனை உத்தியாக கொண்டிருப்பவை. நகரத்தின் இரக்கமற்ற முகமும் சூதுவாதற்று எவரையும் நம்பும் எளியவர்களை அது தன் சூழலுக்குள் சிக்க வைத்து கபளீகரம் செய்து விடுதலும் ’சூது நகரம்’ கதை. நகரத்தின் பெரு விரிவில் தமது முகங்களை மறைத்து ஆடும் கண்ணாமூச்சியின் முடிவில் நிஜம் தெரிய வரும்போது ஏற்படும் ஏமாற்றம் ‘கழிவரை காதல் பிரதி’ இரு கதைகளுமே ஒருவித நம்பிக்கை வறண்ட எதிர்மறையான தொனியில் புனையப்பட்டிருக்கின்றன என்ற போதும் நகர் சார்ந்த புறச்சித்தரிப்புகளும் கதை மாந்தர்களது சித்தரிப்பும் கதைகளை ரசிப்புக்கு உகந்ததாக்குகின்றன. ‘தரை தேடிப் பறத்தல்’ சுதந்திரம் என்னும் கருத்துருவாக்கத்தை வழமைக்கு மாறான பின்னோக்கிய உருவகமாக பறந்து கொண்டிருக்கும் பறவை தரையைக் கண்டுவிடுவதை ஏக்கமாக கொண்டிருப்பதாக புனைந்திருப்பது புதுமையானது. கருஞ்சிவப்பு,வெள்ளை,மஞ்சள்,நீல பறவைகள் வழியாக இக்கதை விரிவு பெறுகிறது.’வாழ்க்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல. அது பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு. கூடு கட்டப் பழகு. பறவையாய் வாழப் பழகு’ நீலப் பறவை வெள்ளைப் பறவைக்கு அறிவுறுத்துகிறது. குறியீடானாலும் கதையின் பெண்ணிய பார்வை தீர்க்கமாக புலப்படும் வகையிலமைந்தகதை இது. ‘நதியில் மிதக்கும் கானல்’ கதை பெண்ணின் காதல் துயர் பற்றியதாக இருந்தபோதும் ‘காட்டின் பெருங்கனவு’ கதையினை போலின்றி கழிவிரக்கமும் புலம்பலுமான சோகமுமாக நிறைவடைகிறது. அங்கதம் தேர்ந்த புனைக் கதை எழுத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று.’பீத்தோவனும் கலைந்த காதலும்’ அங்கதத்தின் பாற்பட்ட எளிமையான, அடங்கிய அங்கதம் அமைந்த கதை.
பெண்ணிய நோக்கிலான புனைவெழுத்தினை சமரசமற்ற பாத்திர உருவாக்கங்களினால் புதிய தளங்களை நோக்கி நகர்த்தும் சந்திரா தீர்க்கமான பின்னல்களுடன் கதையை கட்டமைப்பதிலும் சரளமாக அதை சொல்லிப் போவதிலும் தனக்கிருக்கும் தேர்ச்சியை இத்தொகுப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார். கதை மொழிக்கு கூர்மையளிப்பது தனது கதை புலன்களை வாழ்வு குறித்த பலவித பார்வைகளுக்குமாக விஸ்தரித்துக் கொள்வது போன்றவற்றால் இன்னும் சிறப்பான கதைகளை அவர் எழுத முடியும். அந்த நம்பிக்கையினை இந்த தொகுப்பு குறைவில்லாது வழங்குவதாகவே இருக்கிறது.

’காட்டின் பெருங்கனவு’- சிறுகதைகள்(2009).ஆசிரியர்:சந்திரா,வெளியீடு:உயிர் எழுத்து பதிப்பகம்.9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,கரு மண்டபம்,திருச்சி 620 001.

நன்றி:கல்குதிரை
வேனிற் காலங்களின் இதழ்.

வியாழன், 5 மே, 2011

கார்ல் மார்க்ஸும் என் குடும்பப் புகைப்படமும்.



எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்வது எப்போதும் விருப்பமானதாக இருந்தது இப்போதும் இருக்கிறது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே ’போட்டோ புடிக்கனும்’ என்று அப்பாவை நச்சரித்துக்கொண்டிருப்பேன். அம்மா, ,அப்பாவின் இளவயது புகைப்படங்கள் ஒன்றிரண்டு தவிர அக்கா, அண்ணன், என்னுடைய எந்தப் புகைப்படங்களும் வீட்டில் இல்லை. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அப்பா ஒரு சிறு வீட்டைக் கட்டினார். புது வீட்டுக்கு குடிபோவதற்கு முன் அப்பா ஒரு நாள் ’எல்லாரும் போட்டோ புடிங்க கிளம்புங்க’ என்று சொல்லி, ஊரில் அப்போது பிரபலமாக இருந்த துரை ஸ்டூடியோவுக்கு எங்களையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போனார் . எங்களுடைய முதலும் கடைசியுமான குடும்ப படத்தை அங்கே எடுத்துக்கொண்டோம். அதற்குபின் தனிப்பட்ட முறையில் நிறையப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோமே தவிர நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் எடுக்க வாய்க்கவில்லை. அப்போதெல்லாம் புகைப்படத்திற்குச் ஃபிரேம் போடுவதற்கு முன் பாஸ்போர்ட் சைஸில் .புகைப்பட நகலைக் கொடுப்பார்கள். அதை பார்த்து சரியாக இருக்கிறது என்று சொன்னால் பின்பு அதை கண்ணாடி போட்டு ஃபிரேம் பண்ணிக்கொடுப்பார்கள். அந்த அளவிற்கு புகைப்படம் என்பது அரிதான ஒன்றாக இருந்தது. நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருந்த குடும்பப் படம் மற்றும் அம்மா அப்பா தனியாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இதோடு சேர்த்து இன்னும் மிகப்பெரிய அளவில் இருந்த ஃபிரேம் செய்யப்பட்ட ஐந்து புகைப்படங்களையும் கொண்டு வந்தார் அப்பா. அதிலிருந்த யாரையும் எனக்குத் தெரியவில்லை. எல்லாம் தனித் தனி ஆண்களின் புகைப்படம். அம்மா அப்பாவை திட்டிக்கொண்டிருந்தது. ’இப்படி பணத்தை தண்டமா செலவு பண்ணுவாங்களா?இவங்கெல்லாம் வீட்ல மாட்டி வச்சா சோறு தானா கிடைக்குமா’ என்று ஏகமாறி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. ’உனக்கெல்லாம் என்ன கூறு இருக்கு. இவகெல்லாம் எம்புட்டு பெரிய தலைவர்கள்னு உனக்கு தெரியுமா?. எம்புட்டு மக்களை காப்பாத்தியிருக்காங்க தெரியுமா? என்று பதிலுக்கு அப்பா சொல்ல ’சம்பாதிக்கிறதெல்லாம் இப்படியே செலவு பண்ணினா நடுத்தெருவிலதான் நிக்கனும்’ என்று சொல்லிவிட்டு ’இனி சொல்லி ஆகப்போறது ஒன்னும் இல்லனு’ அம்மா அமைதியாகப் போய்விட்டது. அப்பாவிடம் அவர்கள் யார் என்ற கேள்வியை நான் ஆர்வத்தோடு கேட்க பசி, புரட்சி,சோசலிசம்,பணக்காரன்,ஏழை,விவசாயி என்று வார்த்தைகள் வருமாறு அப்பா ஏதோ சொல்லிவிட்டு எல்லா புகைப்படங்களையும் சுவரில் மாட்டினார். மிகப்பெரிய தாடியோடு இருந்தவரின் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பெயரைக் கேட்டேன் காரல் மார்க்ஸ் என்றார் அப்பா. எங்க வீட்டில் இருந்ததிலேயே மிகப்பெரிய புகைப்படம் அதுதான். பின்பு இரவு நேரங்களில் அந்தப் புகைப்படங்களைக் காட்டி அப்பாவிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்படி கேட்ட நாள்களில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஸ்ட்ராஸ்கி, ஜீவானந்தம் இவர்கள்தான் புகைப்படத்தில் இருப்பவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அந்தப் பெயர்கள் எனக்கு பழக்கப்பட்ட பெயர்களாக இருந்தன. ஆம் என் அண்ணனுக்கு லெனின் என்று பெயர் வைத்திருந்தார் அப்பா. அதேபோல் உறவினர்கள் பலருக்கும் மார்க்ஸ்,ஸ்டாலின்,ட்ராஸ்கி,ஜீவானந்தம் என்ற பெயர்கள்தான் சூடப்பட்டிருந்தன. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்ய புரட்சி, கம்யூனிசம் பற்றி அப்பா சொல்வது லேசாக புரிந்தது. அப்பா கம்யூனிசத்தை கரைத்து குடித்தவர் கிடையாது. அடிப்படை அளவிலேயே தெரிந்து வைத்திருந்தார். கட்சி வகுப்பில், அலுவலகத்தில் பேசியவற்றை தெரிந்துகொண்டு அதையே எனக்கும் சொன்னார். அவர் பேச்சின் மூலம் ஏற்றத்தாழ்வு, அதிகாரம் இந்த இரண்டுக்கும் எதிரான மனநிலையை என்னால் சிறுவயதில் உணர்ந்து கொள்ள முடிந்தது. மற்ற என் தோழிகளைவிட சமூகத்தை புரிந்து கொள்ள எனக்கு அடிப்படையாக இருந்ததும் அதுவே. அது ஒட்டுமொத்தமான புரிதல் அல்ல. ஆனால் மற்ற பெண் பிள்ளைகளிலிருந்து மாறுபட்டு யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கேயோ கிராமத்தில் அடையாளமற்று இருந்திருக்க வேண்டிய என்னை மாற்றியதும் அதுதான்.அப்பா கிராமத்து வீட்டைவிட்டு சென்னைக்கு என்னுடன் வந்ததும், வீட்டை ஒழுங்க செய்கிறேன் என்று அண்ணன் வீட்டில் இருந்த மார்க்ஸ்,லெனின் படங்களோடு எங்கள் குடும்ப படத்தையும் சேர்த்து அப்புறப்படுத்திவிட்டது. எங்கள் வீட்டுச் சுவர்களில் உறவினர்களைப் போல் தொங்கிக்கொண்டிருந்த அவர்களைப் பற்றிய வரலாற்றை,புரட்சியை என் அண்ணன் குழந்தைகள் மற்றும் என்னுடைய குழந்தைகள் யாரும் தெரிந்து கொள்ளவில்லை. அப்பாவைப்போல் அவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கும் ஆர்வமும் இல்லை எனக்கு. புகைப்படம் இருந்திருந்தால் அவர்கள் யார் என்று குழந்தைகள் தானே கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள். இப்போது வம்படியாக அவர்களை அழைத்து கம்யூனிசம் புரட்சி என்று பேச ஆரம்பித்தால் அழுதுகொண்டு ஓடிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மறைந்துபோன புகைப்படக் கதைகளைப் பற்றிச் சொல்வதா? வேண்டாமா? அல்லது அவர்களுக்கு விருப்பம் இருந்தால் தானாக தெரிந்து கொள்ளட்டுமா? என்று யோசித்தே எதையும் சொல்லாமல் இருக்கிறேன். நான் தெரிந்து கொண்ட அடிப்படை விசயங்களைக்கூட காலம் பலமடங்கு முன்னேறியும் அவர்கள் தெரிந்த கொள்ளாமல் இருப்பது வருத்தம்தான். ஐந்தாம் வகுப்புகூட படிக்காத என் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்தைக்கூட நான் என் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காமல் இருப்பது குற்ற உணர்வாகத்தான் இருக்கிறது. இப்போது அப்பாவும் இல்லை அவர்களுக்குச் சொல்ல.