வெள்ளி, 30 செப்டம்பர், 2011

அறைக்குள் புகுந்த தனிமை




இன்று பிற்பகல் சுவற்றோடு கரைந்த வெறுமையில் உப்பைப்போல் அவளுடல் வெக்கை கொண்டிருந்தது. தன்னிலை கொள்ளமுடியாமல் கண்கள் அலைந்தோய்ந்து கொண்டிருந்தன. அலைபேசியில். நீண்ட யோசனைக்குப் பின்பாகவே அவள் தன் தோழிக்கு போன் செய்தாள். பேசத் துவங்கிய சில நொடிகளிலேயே அவர்கள் இருவரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரிந்தது. பொதுவான விசாரிப்புகளுக்கு பிறகு மெளனமாகவே இருந்தார்கள். இருவரின் மனதிலும் வெறுமையின் மிகநீண்டதொரு வரைபடம். எங்கேயாவது வெளியில் செல்லலாமா என்று கேட்டாள் அவள். ’வேலை விசயமா இன்னைக்கு ஒருத்தரை பார்க்கிறேன்னு சொல்லியிருக்கேன்.அஞ்சு மணிக்கு பஸ் ஸ்டாப்ல நிற்கிறேன் வந்து கூட்டிட்டு போ. உன்னை பார்த்துட்டு அப்படியே அவரை பார்க்கப்போறேன்’ என்றாள் தோழி.

பஸ் ஸாடப்பில் நின்று கொண்டிருந்த தோழியை தன் ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டாள். ’க்ளைமேட் அழகா இருக்குல்ல’ . ஆமாம் என்று அவளுக்கு பதில் சொல்கையில் இருவரின் மனமும் லேசாக மகிழ்ந்தது. பாலத்தில் ஏறும் போது ஏதோ காற்றில் பறப்பதாக நினைத்து கைகளை விரித்துக் கொள்ள நினைத்தாள். டீசலப்பிய காற்று வேகமாய் தீண்டிச்செல்லவும் சில நொடி முகத்தை இடது பக்கமாகத் திருப்பி மீண்டும் சாலையைப் பார்த்தாள். தோழி மெதுவாக அவள் தோளை தொட்டு ’இந்த பாலத்தில் இப்படி உன்னோடு வர்றது என்னமோ மனதிற்கு மிகப்பெரிய சுதந்திர உணர்வையும் நம்பிக்கையும் கொடுக்குது’ என்றாள். தோழியுடைய வார்த்தைகள் அவளை உற்சாகப்படுத்தியது. அருகருகே அவளை நெருங்கிச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை. அப்படி வாகனங்களுக்கிடையே செல்வது அவளுக்கு ஆனந்தமாகவே இருந்தது. இப்படியொரு பயணம் எப்பபொழுது வேண்டுமானாலும் அவளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் ஏனோ அப்படிச் செய்யாமல் அறைக்குள் உறைந்து கிடக்கவே விரும்புகிறாள். மனம் நெருக்கடியில் தவிப்பதை விரும்புகிறாள் போல. மரண அவஸ்யையைவிட கொடுமையான தனிமையின் கணங்களை அதே வாதையோடு அனுப்பவிக்கிறாள். முரண்டு ஓடும் மனம் நிர்கதியற்று ஒரு புள்ளியில் வந்து நிற்கும் போது கண்கள் பஞ்சடைத்து மனம் சக்கையைப்போல் அறையில் மூலையில் கிடக்கும். யாருடனும் பகிர்ந்து கொள்ளப்படாத நெருக்கத்தை அன்பை வாஞ்சையோடு தடவி மீண்டும் அறையின் மூலையில் எரிந்துவிடுகிறாள். திருப்திபடுத்த முடியாத வாழ்வை விட்டகழ்வதும் முடியாதென உணரும் பொழுதில் யாரிடமாவது பேசத் துணிவாள். அப்படித்தான் அன்று தோழியை அழைத்தாள். பின்புதான் தெரிந்தது அவளும் இதே மனநிலையில் இருப்பது.

எங்கு செல்வது என்று தோழியிடம் கேட்டாள். அவள் பதில் சொல்லாது காற்றை நுகர்ந்து கொண்டிருந்தாள். தோழி தன்னோடு பயணப்பட விருப்பம் இல்லாமல் இருக்கிறாளோ என்று சந்தேகம் வர ’நீ யாரையோ பார்க்கனும்னு சொன்னியே எங்கன்னு சொல்லு அங்க உன்னை எறக்கிவிட்டுறேன்’ என்றாள். ’நீ எங்க போற’ என்று கேட்டாள் தோழி. பதில் சொல்லாது கொஞ்ச நேரம் யோசித்தவள் ’உன்னை எறக்கிவிட்டுட்டு அப்படியே பீச்சுக்கு போறேன்’ என்றாள். தோழி உடனே, ’நானும் வர்றேன். அந்தாளை கொஞ்ச லேட்டா பார்த்துக்கிறேன்’ என்றாள். இருவரும் கடற்கரை ரோட்டை அடைந்தார்கள். ’இந்தப்பக்கம் வந்த ரொம்ப வருசமாச்சு’ என்ற தோழி ’நான் இப்போ சந்தோசமா இருக்கேன்’ என்றாள். அவள் எந்த கேள்வியும் கேட்காமல் சிரிக்க, ’இந்த சூழல் நல்லாருக்கு. இந்த ரோடு இவ்வளவு அழகா இரும்னு நெனைக்கல’ என்றாள் . வண்டியை நிறுத்திவிட்டு காந்திசிலைக்கு அருகே போய் உட்கார்ந்துகொண்டார்கள். ஏதோ வேறு தேசத்தில் இருப்பதைப்போன்று இருவருக்கும் ஒருவித உணர்வு. புறவெளியின் இயக்கத்திலிருந்த யாரும் அவர்கள் மனதில் பதியவில்லை. அவர்களைத் தவிர மற்றவர்கள் பேசியது எல்லாம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. தோழி அவளைப் புகைப்படம் எடுக்க விரும்பினாள். அவள் விருப்பத்துடன் இயைந்து கொடுத்தாள். தான் அழகாக இருக்கும்படியான போஸ்களை மிக கவனத்துடன் செய்தாள். அவளின் அந்தக் கவனமும் ஒத்துழைப்பும் தோழியை உற்சாகப்படுத்தியது. பத்துக்கு மேற்ப்பட்ட புகைப்படங்களை எடுத்தாள். போதும் என்று சொல்லி அந்த இடத்தைவிட்டு எழுந்து தோழியை காந்தி சிலைக்கு கீழே திண்டில் உட்காரச் சொன்னாள். அவள் நீண்டகாலமாய் பாதுகாக்கப்படும் ஓவியத்தைப்போல் கண்ணில் மட்டும் உயிர்ப்பை தேக்கி அசையாது அமர்ந்தாள். அவளை மேலும் நான்கு புகைப்படங்கள் எடுத்துவிட்டு வெளிச்சம் போதவில்லை என்றாள். இருவரும் பேசியபடியே அங்கிருக்கும் கடைக்குச் சென்றனர். தோழியின் இடது கையைப் பற்றியபொழுது அவளின் கை குளிர்ந்து போயிருந்தது, ‘சுத்தி இருந்தவங்க எல்லாம் போட்டோ எடுக்கிறதையே பார்த்துகிட்டிருந்தாங்க. அதான் போதும்னு சொல்லிட்டேன். அதுவும் இல்லாம லைட் வேற இல்ல’ என்றாள். தோழி எடுத்த புகைப்படங்களை பார்த்தாள். அவள் விரும்பிய அழகில் இருந்தது. திருப்திபட்டுக்கொண்டாள். ஏதோ நிம்மதி இருந்தது அதில். ’வாழ்க்கையோட போதாமையே திருப்தி இல்லாம இருக்கிறதுதான். நாம எதையாவது செஞ்சு அதை போக்கிடனும். இல்லன்னா நாம எப்பவும் துன்பபட்டுகிட்டுதான் இருக்கனும்’ புகைப்படங்களை பார்த்துக்கொண்டு வந்த அவள் தோழியின் பேச்சை கேட்கும் பொருட்டு அதை மூடி வைத்தாள். ஏனோ அவள் அதற்கு மேல் அந்த பேச்சை தொடர விரும்பாமல் அந்த கடைக்கு செல்வதை மட்டும் கவனமாகச் செய்தாள். இருவரும் மிக முக்கியமான ஒன்றை அடைவதைப் போன்று அந்த கடையைச் சென்றடைந்தார்கள். கடல் பற்றியோ கடலுக்கு அருகே செல்வது பற்றியோ இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கடலைச் சுற்றிய காட்சிகள் வெறும் காட்சிகளாகவே இருந்தது. அதைபற்றிய எந்த அவதானிப்பும் அவர்கள் மனதில் இல்லை.வெறும் மனிதர்கள்,கடைகள்,கடல் அடங்கிய இடமாக மட்டுமே அந்த இடத்தை உணர்ந்தார்கள்.

இருவரும் அந்தக் கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தார்கள்.அவள் சென்னாவும்,தோழி சீஸ் பிரட்டும் ஆர்டர் செய்தார்கள். அவர்கள் மனதிற்குள் கிடந்த கசப்புகள் அந்த நேரத்தில் எழவே இல்லை. வேலை, வாழ்வின் இருப்பு,சினிமா, இலக்கியம்,நண்பர்கள் எதை எதையோ பேசினார்கள். எந்த பேச்சிலும் ஆழ்ந்த பொருள் இல்லை. அப்படி இல்லாமல் இருக்குமாறு இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். ஒரு விசயத்தின் ஆழமே அவர்கள் இருவரையும் பாதிப்பதாக இருந்தது. அதை உணர்ந்து மேலோட்டமாகவே பேசினார்கள். அங்கே இருப்பதற்கான தேவை தீர்ந்ததும் ஒரே நேரத்தில் இருவரும் கிளம்பலாமா என்றார்கள். அவள் தான் பார்க்க வேண்டிய நபரை காந்தி சிலைக்கு வரச்சொல்லி அங்கே வந்ததும் போன் செய்யச் சொன்னாள். அவர் அலுவலகம் கடற்கரைக்கு பக்கத்திலேயே இருந்ததால் பத்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னார் அவர் வரும் வரையில் வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். விடைபெறும் தருணத்திலும் முக்கியமான எதையும் அவர்கள் பேசிவிடவில்லை. அடுத்த பத்துநிமிடத்தில் அந்த நபர் போன் செய்ய தோழி ’இதோ பக்கத்திலிருக்கிறேன் வந்துவிட்டேன்’ என்றாள். ’அவரை பார்த்துட்டு போறியா’ என்றாள் அவளிடம். அவள் ’இல்ல நான் பார்க்கல’ என்று சொல்லிவிட்டு தோழியை அனுப்பி வைத்தாள். தோழி அந்த இடத்திலிருது செல்வதை பார்க்கத் தோன்றவில்லை. கைப் பையிலிருந்த போனை எடுத்து அதில் வயரை பொருத்தி பாடலை ஓடவிட்டு காதில் வைத்து வாகனங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்தாள். இருபத்திமூன்று வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பெருநகரத்தில் இப்படியான பார்வைகளை எதிர்நோக்குதல் ஒன்றும் புதியதான விசயமில்லை. அதிலும் இவன் முகத்தில் தீர்க்கமுடியாதவொரு வெக்கையப்பிக் கிடந்தது. தயக்கமின்றி இவளுடலில் பார்வையை அலையவிட்டவன் இவள் நெருங்கி வருகையில் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டான். அவளுக்கு உண்மையாகவே சிரிப்பு வந்தது. எப்படியும் அவன் அவளைவிட நான்கைந்து வயதாவது குறைந்தவனாக இருப்பான். அவள் அவனை கவனித்தபடியே அவள் வண்டி இருக்கும் இடத்திற்குச் சென்றாள். அவன் வண்டி இருந்த இடத்திலிருந்து ஒரு இருபது முப்பது வண்டி தாண்டியே அவள் வண்டி இருந்தது. இப்போது அவன் ஸ்டாண்ட் எடுத்து வண்டியில் உட்கார்ந்தான். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரே சமயத்தில் தன்னுடல் முழுக்கவிருக்கும் வெறுமையும் அவனுடலில் தெரியும் பதட்டமும் ஏதோவொரு வகையில் ஒரேபுள்ளியில் மோதிச்செல்வதாயிருந்தது. அவன் தன்னை பின்தொடரப் போகிறான் என்பதை உடனே யூகித்துக்கொண்டாள். அவளுக்கு லேசான உற்சாகம் எழுந்தது. அவனால் அவள் வயதை கண்டுபிடிக்கத் தெரியவில்லையா இல்லை அவள் அணிந்திருக்கும் ஆடை அவனை அப்படி நினைத்திருக்கச் செய்திருக்கலாம். அல்லது அவனுக்கு வயது ஒரு தடையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.அவள் சிக்னலுக்காக காத்திருந்தாள், அவன் இவள் வண்டியை எடுப்பதற்காக காத்திருந்தான். அவனை கண்டுகொள்ளாமல் சிக்னல் விழுந்ததும் வண்டியை வேகமாக ஓட்டிப்போனாள். அவன் அவளுக்கு இணையாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். ஹெட்போன் வழியாக கேட்டுக்கொண்டிருந்த பாடல் அவளை உற்சாகமூட்டியது. விரைந்து வண்டியை ஓட்டினான். அவனுக்கு தெரியாமல் அவனை கவனித்தபடி வந்தாள். அவன் இவளைத் தொடர்வதை நிச்சயமாக அவளைத் தவிர்த்து இன்னும் சிலரும் கவனித்திருக்கக்கூடும். தனது யவனத்தின் மீது பெருமிதம் கொள்ளமுடிந்தது அவளால். நிச்சயமாக அவனுக்கு சில வார்த்தைகளை பரிசளிக்க வேண்டுமென சிரித்துக் கொண்டாள்.

அவள் திரும்பிபார்க்காமல் எந்த சைகையும் செய்யாதபோதும் அவன் விடுவதாக இல்லை பின்னால் வந்துகொண்டே இருந்தான். ஞாயிற்றுகிழமை ஆதலால் நகரத்தின் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. கடற்கரை சாலையை கடக்கும்போது வெளிச்சமாகவே இருந்தது. அதைத்தாண்டி மேம்பாலத்தில் அவர்கள் சென்றபோது இருட்டத் தொடங்கியது. அவன் அவள் பக்கத்தில் வண்டியை ஓட்டியபடி சிரித்துக்கொண்டு வந்தான். மேம்பாலத்தில் வண்டியை செலுத்தி போகும்போதெல்லாம் அந்தரத்தில் பறப்பதைப்போலவே தோன்றும். ராட்டினத்தில் ஏறிய குழந்தை போலவே சிரித்துக்கொண்டாள். அவளுடைய சிரிப்பை தனக்கான சைகையாக பின்தொடர்ந்தவன் நினைத்துக் கொண்டான். அவளும் அதை கலைக்க விரும்பவில்லை. வண்டியை தி.நகரை நோக்கி ஓட்டினாள். ஒரு டீக்கடையை பார்த்து வண்டியை நிறுத்தினாள். ஜி.என்.ஜெட்டி சாலையில் மரத்துக்கு கீழே பிளாட்பாரத்தில் அந்த டீக்கடை இருந்தது.அங்கே போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சேரில் தனியாக அமர்ந்து கண்ணாடி டம்ளரில் டீ குடிக்க அவளுக்கு பிடிக்கும். தெருவோர டீக்கடைக்கு அவள் போவதை நினைத்து ஆச்சர்யமாகி அவனும் வண்டியை நிறுத்தி அவள் பக்கத்தில் வந்து “நீங்க கவிதா ஃபிரண்ட்தானே கல்யாணத்தில் பார்த்தோமே ஞாபகம் இல்லையா ” என்றான். அவளால் இப்போது சிரிக்கமுடியவில்லை. அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள் விழிநரம்புகளெங்கும் காமத்தின் மெல்லிய சுவடுகள் வரியோடிக்கொண்டிருந்தன. அவன் சொற்கள் அவளுக்கு அபத்தமாகப்பட்டது. அவன் உடல் கொதித்து வெடித்துவிடத் தயாராயிருப்பதை முகத்தின் வெக்கை உணர்த்தியது. ’நீங்க நேரடியாவே நான் யாருன்னு கேட்கலாம்’. ’இல்ல தப்பா நெனைச்சுகாதீங்க எனக்கு அப்படித்தான் தோணுச்சு’ என்றான் அசடு வழிந்தபடி. ’டீ சாப்பிடுறீங்களா’ என்றாள்.அவள் திட்டப்போகிறாள் என்றிருந்தவனுக்கு அவள் அப்படிக் கேட்டதும் வியப்பாக இருந்தது. ’ஒகே’ என்று சொல்லிவிட்டு அவனே ஆர்டர் செய்தான். டீயை வாங்கிவந்து அவள் கையில் கொடுத்துவிட்டு ’சாரி நீங்க கவிதா ஃபிரண்டுன்னு நெனைச்சுதான் உங்க பின்னாடி வந்தேன்’ என்றான் மறுபடியும். அதற்கு மேல் அவள் எரிச்சல் அடைந்தவளாக ’ஆமாம் நான் கவிதா ஃப்ரண்டுதான்’ என்றாள். திரும்பவும் ஒரு அபத்தமான சாரியை சொல்லி ’இல்ல நீங்க கோபமாகிட்டீங்க போல அதான் கவிதா ஃபிரண்டுன்னு சொல்றீங்க’ என்றான். ’உங்க பிரச்னை என்ன நான் கவிதா ஃபிரண்டா இருக்கனுமா? இல்ல இல்லாமல் இருக்கனுமா எது உங்களுக்கு வசதி’என்றாள் அவன் முகம் சுருங்கிவிட்டது. அன்றைய பொழுதை அவள் நேசிக்க விரும்பினாள். யாரென்று தெரியாத ஒருவனிடம் பேசுவதும் கோபித்துக்கொள்வதும் இனம் புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் கடுமையாக பேசினால் அவள் இங்கேயே கழன்று கொள்ள நேரிடும். அதை அவள் விரும்பவில்லை. அவனை சகஜமாக்க ’எங்க வேலை செய்றீங்க’ என்றாள். அவன் பெயரைக் அவள் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. அவள் பெயரையும் அவன் கேட்கவில்லை. அவன் எம்.பி.ஏ படித்திருப்பதாகவும் ஏதோ ஒரு கம்பெனியில் நிர்வாக பிரிவில் மேலாளராக இருப்பதாகச் சொன்னான். அவன் கழுத்தில் குறுக்காக ஒரு பையை போட்டிருந்தான். அதற்குள் லேப்டாப் இருக்கலாம். அவனுடைய அதிகாரித்தனமான ஆடை, பையை குறுக்காக போட்டிருந்தவிதம் எதுவும் ரசனைக்குரியதாக இல்லை. எந்தவித ஈர்ப்பும் அவளுக்கு அவனிடம் இல்லை. அவன் பின்தொடர்ந்து வருவதும் அவள் அத்தகைய சூழலில் இருப்பது மட்டுமே முக்கியமானதாக இருந்தது. டீக்கான காசை அவள் கொடுக்க அதை மறுத்து அவனே கொடுத்துவிட்டு வந்தான். அவர்கள் இருவரும் காதலர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்று கடைக்காரன் நினைத்திருப்பான், அவன் எந்தவித ஆச்சர்ய பார்வையும்யின்றி காசை வாங்கிக் கொண்டான். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை அவளிடம் இல்லை. வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் கை சாவிக்கு போகும்போது ’வாங்களேன் ரெஸ்டாரெண்ட் போய் சாப்பிட்டுட்டு போகலாம்’. மீண்டும் அவளுக்கு சிரிப்புதான் வந்தது. செய்வது சரியா தவறா என்ற யோசனையெல்லாம் இல்லை. ஏதோ ஒரு நெம்புசக்தி உந்தித்தள்ள ’சரி’ என்றாள். அந்த சூழ்நிலையில் உணர்ச்சிபிளம்பாக இருந்தாள். இத்தகைய செயல்கள் தனிமையை காலுக்கடியில் போட்டு மிதிப்பதாக நினைத்த அவள்மனதில் அதேசமயத்தில் தனிமையின் கூட்டை இன்னும் அகலப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தோன்றியது. அவள் ஒரே நேரத்தில் இரண்டு எதிர் எதிர் உணர்ச்சி நிலைக்குள் இருந்தாள். எல்லா நினைவுகளையும் ஆயுதமின்றிக் கொலைசெய்ய தனிமையால் மட்டும்தான் எப்பொழுதும் இயல்கிறது. தன்னைத் தொடர்ந்துவரும் அந்த இளைஞன் யாராக இருப்பான்? எல்லா ஞாயிறுகளிலும் இதுமாதிரி புதுப்புது கவிதாவின் தோழிகளையோ அல்லது கவிதாக்களையோ பின்தொடர்பவனாக, அவர்களோடு சல்லாபித்து அந்த தினங்களின் இரவுகளுக்கு மட்டும் அவர்களின் உடல் மீதான உரிமை கொண்டாடுகிறவனாய் இருக்கலாம். இன்னும் திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லையென கொஞ்சமாய் முளைக்கத் துவங்கியிருந்த மீசையும் தாடியும் சொல்லிக் கொண்டிருந்தன.


முதலில் ரெஸ்டாரெண்ட் போகலாமா என்று கேட்டவன் பின்னர் பீட்ஸா கார்னர் போகலாமா என்றான். எந்த யோசனையின்றியும் சரி என்றாள். அவன் வண்டியை ஓட்டிக்கொண்டு முன்னால் போக இவள் அவன் பின்னாலயே வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். பீட்ஸா கார்னரில் ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்டார்கள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். குளிர்பானம் மட்டும் போதும் என்றாள். அவனுக்கு ஒரு பீட்ஸா சொல்லிக்கொண்டான்.

’அப்புறம் என்ன படிக்கிறீங்க’? என்று கேட்டான். அவள் அமைதியாக ’எம்.ஏ ஹிஸ்ட்ரி’ என்றாள். பனிரெண்டாவதுக்கு மேல் படிக்கவில்லை என்று சொன்னால்கூட அவன் இத்தகைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கமாட்டான்போல. ஒரு எரிச்சலும் அகங்காரமும் கலந்த தோரணையில் ’ஹிஸ்ட்ரியா? இந்த காலத்திலும் எம்.ஏ ஹிஸ்ட்ரி படிப்பாங்களா?’ என்றான்.

அவனை முழுவதுமாக அளக்கும் பாவனையில் உற்றுக் கவனித்தாள். ’எம்.ஏ ஹிஸ்ட்ரி படிச்சிட்டு என்ன வேலை பார்க்க போறீங்க?’ எளக்காரமாக பேசிக்கொண்டே போனான்.

’உங்கள பாத்தா வழக்கமான பெண் மாதிரி தெரியலையே..?’

’வழக்கமான பெண்னுனா..?’

’இல்ல சம்திங் டிஃபரெண்ட்..வழக்கமா தெரியாத பெண்கிட்ட நீங்க கவிதா ஃபிரண்டானு கேட்டிருந்தா இல்லைனு பதில் சொல்லிட்டு கட் பண்ணிட்டு போயிடுவாங்க .,யூ ஆர் டிஃபரெண்ட்..ஐ மீன் யூ ஆர் ஃப்ரெண்ட்லி’

’ஓ அப்படியா..ஃப்ரெண்ட்லியா இருந்தா டிஃபரெண்ட்னு அர்த்தமா’

ஹா..ஹா ..என போலியாக சிரித்தவாறு..’யு காட் மீ ராங்..நான் அப்படி சொல்ல வரல..சரி விடுங்க ., அப்புறம் உங்கள பத்திச் சொல்லுங்க’

தெரியாத ஆண் தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என அறிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது.’நீங்களே கெஸ் பண்ணி சொல்லுங்களேன் என்னைப் பற்றி, டிஃபெரெண்டான பெண்னுனு நீங்க கண்டுபிடிச்ச மாதிரியே.,’

’ஓ நைஸ்., இது நல்லா இருக்கே..சரி உங்கள் வயது 24-25 இருக்கும்’

”ம்ம்ம்”

”சரிதானே..”

”கிட்டதட்ட...”

’நீங்க இவ்வளவு ஈசியா பிராட் மைண்ட்ட்டா இருக்கிறத பார்த்தா நீங்க நிறைய புக்ஸ் படிப்பீங்க சரியா’

சிரித்துக்கொண்டு ’ஆமா..கரெக்ட்’

’என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க..’

’ஆனந்தவிகடன் குமுதம்..’

ஹா..ஹா..பெரிய ஜோக் சொன்னது போல் மறுபடியும் போலியாகச் சிரித்தான்

’இல்ல ..நான் கேட்டது நாவல், போயம் மாதிரி’

’இல்ல நான் அதெல்லாம் படிக்கறதில்ல ஆர்வமில்ல..’

’ஓ..அதெல்லாம் இல்லாமலயே யூ ஹேவ் பிராட் நாலெட்ஜ்’
என்னை புகழ்ந்தே எப்படியும் மடக்கிவிட வேண்டுமென ஆயத்தமாகியிருப்பான் போல...

அவன் பெயரைச் சொன்னான்

’ம்ம்ம்., நல்ல பெயர்.,’

’நன்றி., ஒருத்தவங்க பேரச் சொன்னா பதிலுக்கு நாமளும் பேரச் சொல்லனும்.,’சிரித்தவாரே கேட்டான்

’பெயர் தெரியலன்னா பேச முடியாதா., இவ்வளவு நேரம் பெயர் இல்லாமல்தானே பேசினோம்’ நக்கலாகச் சொன்னாள்..
’உங்களுக்குத் தெரிந்த கவிதாவின் ஃப்ரண்டுக்கு என்ன பேரோ அதுவே என்னோட பேரா இருக்கட்டும்…’ சிரித்தாள்.
அவன் சில நொடிகள் அந்த இல்லாத கவிதாவையும் அவளின் தோழியையும் நினைத்துக் கொண்டு சிரித்தான்.

’யூ ஆர் ரைட்…ஆமா பேசுவதற்கு எதற்கு பெயர்.. எதற்குமே எதுக்கு பெயர்..ஹா..ஹா..’ மறுபடியும் ஜோக் அடித்தது போல் அவனே சிரித்துக்கொண்டான். அவள் என்ன சொன்னாலும் அதை ஆமோதித்து நெருங்கி வருவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான்.

’நீங்க இப்படித்தான் பொண்ணுகள பின் தொடர்ந்து பிக்-அப் பண்ணுவீங்களா..? இதுக்கு முன்ன எவ்ளோ பேர இப்படி பிக் அப் பண்ணியிருப்பீங்க?...ஒரு இருபது?..’
சிரித்தவாறே கேட்டாள்.

கோபம் அடைந்தவனாக ’ஏன் இப்படி கேக்குறீங்க..நான் நீங்க நினைக்கிற மாதிரி தப்பானவன் இல்ல.. நிஜமா கவிதா ஃப்ரெண்ட்னு நினச்சுதான் வந்து பேசுனேன்....’ முகம் சுருங்கிச் சொன்னான். அப்பாவியாய் நல்லவனைப்போல் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டினான்.

‘அந்த மாதிரி பசங்கள்லாம் தப்பானவங்கன்னு நான் சொல்லலையே...” அவன் போலித்தனத்தில் கல்லெறிந்ததை நினைத்துச் சிரித்தாள்.
அவன் இன்னும் சமாதானமாகவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.

’அய்யோ கோவிச்சுகாதீங்க சும்மா கிண்டலுக்குதான் சொன்னேன்…அப்படியே இருந்தாலும் ஒரு பெண்ணை ஆண் தொடர்வது இயல்புதான..இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க’

ரிலாக்ஸ் ஆனவனாய் புன்னகைத்து கொண்டான் ’ரொம்ப ஃப்ராங்க்கா பேசுறீங்க ஐ லைக் யூ’

உள்ளுக்குள் நகைத்துக் கொண்டு,’இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும் “மீ டூ லைக் யூ”..?னா..சிரித்தவாறு கேட்டாள்

மிகப்பெரிய ஜோக்குக்கான அதே சிரிப்புடன் “பிடிச்சிருந்தா சொல்லுங்க”

“இதுக்கு முன்ன உங்ககிட்ட யாராவது லைக்யூன்னு சொல்லியிருக்காங்களா?”
அவன் ‘அப்டில்லாம் இல்லையே…என்று இழுத்து விட்டு சில சமயம் கூட வொர்க் பன்ற பொன்னுங்க கலாய்க்கிறதுக்காக அப்பிடி சொல்றதுண்டு… ஏன்?...
அவன் முகத்தில் சலனமில்லை. தன்னைப் பற்றி அதிகமாக அவளிடம் சொல்கிறோமோ என அவன் நினைத்திருக்கலாம்.

“இல்ல நீங்க சொன்னவிதத்துல இருந்து நிறைய சொல்லிப் பழக்கப்பட்ட மாதிரி இருந்துச்சு…” அவள் சிரித்துக்கொண்டாள்.
அவன் அமைதியாக இருந்தான். அவனோடு பேசுவது அந்த நொடியிலேயே போரடித்துவிட்டது அவளுக்கு. அங்கிருப்பது ஒருவித அசூயை உணர்வை அவளுக்கு ஏற்படுத்தியது.உடனே அங்கிருந்து கிளம்ப விரும்பினாள்.தொடர்பை அறுத்துக்கொள்ளும்விதமாக
”நீங்க மட்டும் இல்லீங்க எனக்கு எல்லா ஆண்களையும் பிடிக்கும்” இதைச் சொல்லும்போது அவன் கண்கள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தன.

’புரியல எல்லா ஆண்களையும்னா ..அப்பா,அண்ணன்,தம்பி’ அவன் அப்படிக் கேட்டது அவளுக்கு மிக அசிங்கமாகப்பட்டது.

’இல்ல..இது வேற நான் என்ன வேல செய்யுறேன்னு தெரியுமா?’

’சொன்னாதான தெரியும்’ புதிரை அறியும் ஆர்வத்துடன் கேட்டான் குழப்பத்துடன். அவனை பேச்சற்று போகும்விதமாக ’நான் உண்மையைச் சொல்லட்டுமா’ என்றாள்.அவன் வியப்போடு பார்க்க. ’நான் படிக்கல.பிராஸ்டியூசன் பண்றேன்’ என்றாள். தெரியாத பெண்ணோடு டேட்டிங்கை அனுபவித்துக் கொண்டிருந்த அவனுடைய சந்தோசத்தில் மண் விழுந்தது. இதுவரையில் அவளை பின் தொடர்ந்துவந்தவிதம் அவள் திட்டிவிடுவாளோ என்று பயந்து பயந்து பேசியதை நினைத்து அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவன் கண்கள் சிவந்து கோபம் கொப்பளித்தது. ‘நானும் ஒரு பிராஸ்டியூட்டை தேடிக்கிட்டுத்தான் இருந்தேன்’ என்று அகங்காரமாக பேச்சை தொடர்ந்தவன் முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல ’இவ்வளவு அலைச்சல் உன்னைப்போய் தப்பா நினைச்சு சே...’ அவன் தன்னுடைய செய்கைகளை நினைத்து வருதப்பட்டான். இப்போது அவன் அவளை ஒருமையில் பேசிக்கொண்டிருந்தான்.

அதற்குமேல் அவளிடம் பேச எதுவும் இல்லை என்று முடிவு செய்து
’சரி எவ்வளவு’ என்றான் எடுத்த எடுப்பில். அவள் இரண்டாயிரம் என்றாள். உண்மையில் அவளுக்கு தான் எவ்வளவு விலைபோவோம் என்று தெரியவில்லை. இரண்டாயிரமா என்று அவன் இழுக்க அவள் அதிகமாக சொல்லிவிட்டோமோ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே ‘சரி போகலாம்’ என்றான். உள்ளுக்குள் உலர்ந்து வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. வாயில் கசப்பை உணர்ந்தாள். கொஞ்ச நேரம் முன்புவரை வெறுமையை உணர்ந்த அவள் இப்போது பெரும் ஆபத்தான சூழலுக்குள் இருப்பதைப் போன்ற பயவுணர்வும் அதே சமயத்தில் தன் உடல் மீதான அருவருப்பையும் உணர்ந்தாள். விழுங்கக் காத்திருக்கும் காண்டாமிருகத்தைப்போல எதிரில் இருந்தவன் தோன்றினான். அவன் முகத்தில் முன்பிருந்த லேசான பயவுணர்வு நீங்கி அதிகாரமும் இனம்புரியாத வன்மமும்
தெரிந்தது அவளுக்கு. அந்த நொடியில் அவனை கொலை செய்யத் தோன்றியது. ’வா கிளம்பலாமா’ என்று கேவலமான தொனியில் கேட்டவன் அந்த நொடியிலிருந்து அவளை முழுவதும் தீர்மானிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டான். ’எங்க உன் இடத்துக்கா என் இடத்துக்கா’ என்றான். அவள் அவனை பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க, ’என்ன முழிக்கிறே இரண்டாயிரம் ஓகே குடித்திடுறேன்’ என்று எழுந்து ’முடிஞ்சதும் பணத்தை குடுக்கிறேன் வா’ என்றான். விட்டால் அவளை தரதரவென்று பிடித்து இழுத்துச் சென்றுவிடுவான்போல. ’எங்க வச்சுக்கலாம்’ என்றான் மறுபடியும்.
அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ’என் இடத்துக்கே போகலாம்’ என்றாள். ’உன் இடம் ஃசேபா இருக்குமா’ என்று கேட்டான். ’வீட்ல யாருமே இல்லை. ஃபேமிலி எல்லாம் ஊருக்கு போய்ட்டாங்க’. ’பேமிலியா? சும்மா பணம் அதிகமா வாங்கிறதுக்காக ஃபேமிலினு சொல்லக்கூடாது. இரண்டாயிரத்துக்கு மேல தரமாட்டேன்’ என்றான். பாலியல் தொழிலாளியின் தொழில் சூட்சமத்தை கண்டுணர்ந்தவன்போல பேசினான். அவள் கண்களில் காட்டிய வெறுப்பை உதாசீனம் செய்தான். ஏளனத்தோடு அவன் உடலை அறுத்துக்கொண்டிருக்கும் அவள் பார்வையை ஒரு பொருட்டாகக்கூட அவன் மதிக்கவில்லை. அடிமையை இழுத்துச் செல்லும் வீரனைப்போல உடல் நிமிர்த்தி கிளம்பலாம் என்று கண்ஜாடை செய்தான். அவள் சரியென்று ஆமோதித்துவிட்டாள். ஆனால் தலை கிர்ரென்று சுற்றியது. ஒரு நொடி உலகம் முழு இருளாகி தெளிந்தது. கசப்பில் ஊரும் நச்சுபாம்பினைப்போல் அவள் நெளிந்துகொண்டிருந்தான். தீண்டும் கரங்களை விழுங்கக் காத்திருக்கும் கொடியவிலங்கினை அவன் அதிகாரத்தின் சாட்டையைக்காட்டி அழைத்தான். ’என் பின்னாடியே வாங்க’ என்று வண்டியை எடுக்கக் கிளம்பினாள்.’ஏரியா எங்க’ அவன் கேட்க கோடம்பாக்கம் என்றாள். அவன் பின்னாடியே போனான்.

அந்த ஞாயிற்றுக்கிழமையிலும் தி.நகர் சாலை பரபரப்பாக நெரிசலோடு இருந்தது.அவன் அவள் பின்னாடியே வந்துகொண்டிருந்தான்.முன்பு அவனிடம் இருந்த குறுகுறுப்பு மறைந்து வேட்கை வெளிப்படையாகத் தெரிந்தது. எல்லாவற்றையும்விட அவன் அதிகாரத்தோரணைதான் அவளைத் தொந்தரவு செய்தது. கோடம்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் அவள் செல்ல அவனும் வந்தான். அவள் வண்டிக்கு பக்கத்திலேயே அவனும் வண்டியை நிறுத்தினான். இரண்டாவது தளத்தில் ஒரு ஒரு வீட்டைத் திறந்தாள். அவள் வீட்டுக்கு எதிரே இருந்த வீடும் பூட்டிக் கிடந்தது. இரண்டு படுக்கை அறையைக் கொண்டிருந்தது. ஏதோ சினிமா படத்தில் காண்பிப்பதைப் போல அந்த வீட்டில் இன்னும் வேறு பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்தான். யாரும் இல்லாததைக் கண்டு ’உன்கூட வேற பெண்கள் இல்லையா?’ என்றான். அவள் அதைக் காதில் வாங்காமல் ’என்ன சாப்டிறீங்க’ என்றாள். ’இல்ல அதெல்லாம் வேணாம் நான் பாத்ரூம் போயிட்டு வாறேன்’ என்றான். அறைக்குள் இருந்த அட்டாச்டு பாத்ரூமை காட்டினாள். அவன் தன்னுடைய பேக், ஃபோன் எல்லாவற்றையும் ஹாலில் வைத்துவிட்டு பாத்ரூம் போனான். அவன் திரும்பிவந்து பார்க்கும்போது அறைக்கதவு சாத்தியிருந்தது. அவன் கதவை திறக்க அது வெளிப்பக்கமாக சாத்தியிருப்பதை உணர்ந்து பயம்கொள்ளத் தொடங்கினான். கதவை லேசாகத்தட்டினான். கதவு திறப்பதாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவன் பயம் அதிகரிக்க மிரண்டுபோய் பலமாக கதவைத் தட்டினான். அவள் ஹாலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தாள். கதவு தட்டப்படுவதை அவள் பொருட்படுத்தவில்லை. டீவியின் சத்தத்தை அதிகரித்தாள். அவன் கதவுக்கு கீழே உட்கார்ந்தான். அந்த அறையை நோட்டமிட்டான். வெறும் புத்தகங்களாக நிரம்பிக் கிடந்தது. அதில் ஒன்றைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போது அவனின் பயம் இன்னும் அதிகரித்தது. கிறுக்கப்பட்ட பல காகிதங்கள் மெத்தையின் மேல் கிடந்தன.அவள் பைத்தியமாக இருப்பாள் என்று உடனே முடிவுக்கு வந்தான். அவளைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து கிளம்புவது பற்றி யோசிக்க ஆரம்பித்தான். கதவைத்தட்டி ’சாரிங்க நான் உங்கள தப்பா நெனைச்சுட்டேன் என்னைத் திறந்துவிடுங்க நான் போயிடுறேன்’ என்றான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததால் மறுபடியும் கதவைத்தட்டி ’நானாங்கே உங்களை கேட்டேன் நீங்களாத்தானங்க பிராஸ்டியுசன் பண்றேனு சொன்னீங்க’.பெண்களை ஒரே மாதிரியாக பார்க்கும் அவன் பார்வையை நொந்துகொண்டான். நேரம் ஆக ஆக கதறத் தொடங்கினான். அவள் எதற்கும் வளைந்து கொடுப்பதாக இல்லை. டாம் அண்ட் செரி பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கதவைத்தட்டி தட்டி சோர்ந்துபோய் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கோபம் வந்தவனாக கதவை உடைக்கும்விதமாக பலமாகத் தட்டினாள். அவள் டீவியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு அவனிடம் பேசினாள். நீ அமைதியா இல்லனா ’திருட வந்த உள்ள பூட்டிவச்சிருக்கேனு சொல்லி போலீஸைக் கூப்பிடுவேன்’ என்றதும் அவன் அழவே ஆரம்பித்துவிட்டான். மறுபடியும் அவள் டீவியின் சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு ஹாலிலேயே படுத்து உறங்கிவிட்டாள். அவன் அவளை கதவை திறக்க வைப்பதற்காக ஏதோதோ பேசியும் கெஞ்சியும் கதவைத் தட்டியும் கடைசியில் சோர்ந்து போனான். பயத்தில் நடுங்கிக் குமைந்துகொண்டிருந்தவனுக்கு பித்துபிடித்ததைப் போலிருந்தது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்த அவள் விடிந்ததும் பல்லை விளக்கி காப்பிபோட்டு சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்கு அருகே வந்தாள். அவன் காய்ச்சலில் முனகிக் கொண்டிருந்தவனைப்போல பேசிக்கொண்டிருந்தான். பேச்சுக்கு நடுவே கதவைத் தட்டியபடியே இருந்தான். அவள் மனம் லேசாக இருந்தது. வெளிக்கதவை திறந்துவிட்டு அவன் அறைக்கதவை திறந்தாள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவனைப்போல சுருங்கிப்போய் கண்கள் பள்ளமாகி காட்சியளித்தான். நேற்று அவனிடம் இருந்த போலித்தனம் அதிகாரம் ஏமாற்று எல்லாம் மறைந்து பயம் மட்டுமே இருந்தது. அவள் ஹாலில் இருந்த ஷோஃபாவுக்கு கீழே அமர்ந்தாள். அவன் பயத்தோடு வெளியே வந்தான் அவள் முகத்தைகூட பார்க்காமல் அங்கே டிபாயில் இருந்த தன்னுடைய பை , ஃபோனை நடுக்கத்தோடு எடுத்தான்.அவனுடைய நரம்புகள் வலுவிழந்து கை,கால் உதறத்தொடங்கியது. அங்கே ஒருத்தன் இருக்கிறான் என்பதை அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அன்றைய நாளிதழை சுவாரஸ்யத்தோடு படித்துக்கொண்டிருந்தாள். அவன் அறையில் அடைக்கப்பட்ட நாயக்குட்டிபோல் ஒரு நொடிகூட தாமதிக்காமல் வெளியே ஓடத்தொங்கினான்.


நன்றி: 361 காலாண்டிதழ்

வியாழன், 19 மே, 2011

தணிக்கை மீறும் உணர்வுகளின் புனைவு வெளி _ அசதா


’காட்டின் பெருங்கனவு’ தொகுப்பு,அதன் கதைகளில் சந்திரா படைத்துதரும் பெண்களின் பருண்மையுலகும் மரபான சமரசங்கள் கொண்டு கட்டப்படாத அவர்களின் அகவுலகும் சமகால தமிழ்ச்சிறுகதை வெளியில் இதுவரை காணாத சில திறப்புகளைக் கொண்டு விளங்குவதனை முன்னிட்டு ஒரு முக்கியத் தொகுப்பாக அமைகிறது. புனைவின் பொதுவளியில் பெண் கதை மொழிதல் என்பதன் வழமைகளும் மறுப்புகளும் மீறப்படுதலில் தொடங்கி,பெண்ணிய கருத்தாக்கங்களை மீட்டுருவாக்கம் செய்வது வரையிலான எழுத்துக்களை நாம் தொடர்ந்து கண்டு வரும்போதும் பெண் புனைகதையாளர்களது எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாக நிற்கையில் மிக சுருங்கியது எனச் சொல்லத்தக்கதான என் வாசிப்பு வெளி அம்பை, லதா ராமகிருஷ்ணன்(அனாமிகா),உமா மகேஸ்வரி,சு.தமிழ்ச்செல்வி,சந்திரா,உமா ஷக்தி என்பதான வெகு சில பெயர்களையே உள்ளடக்கியதாய் இருக்கிறது.பரந்த வாசிப்பனுபவம் உடைய வொருவரும் இப்பட்டியலோடு ஒன்றோ அல்லது இரண்டோ பெயர்களை இணைக்குமளவிலேயே நம் சூழலின் யதார்த்தம் அமைந்திருக்கிறது என்பது என் துணிபு. இப்பின்னணியைக் கருத்தில் கொள்கையில் சந்திராவின் ‘காட்டின் பெருங்கனவு’ தொகுப்பினை ஒரு முக்கிய வரவாக நாம் காணவேண்டியுள்ளதன் அவசியத்துக்கு இன்னும் வலு கூடுகிறது.
தலைப்புக் கதையான ’காட்டின் பெருங்கனவு’ குறிஞ்சி நிலக்காட்சிகளை பின்புலமாகக் கொண்டமைந்து,பதின்ம வயது பெண் மனதின் அசலான உணர்வுகளை மரபார்ந்த தணிக்கைகளுக்கு தொலைவே வைத்து புனைவாக்கிய வகையில் தொகுப்பில் சிறந்த கதையாக நிற்கிறது. கேரளத்தை ஒட்டிய மேற்கு மலைத்தொடரின் காட்சிகளும், நாம் அதிகம் அறிந்திறாத மிளகு பிடுங்குதல் போன்ற வாழ்வாதாரச் செயல்களும் ஊடுபாவிய ஒரு நிலவெளியில் தூரிகையால் தீட்டுவது போல கதை வளர்க்கப்படுகிறது. கதைப் பெண்ணின் தன்னிலை வழியாக விவரிக்கப்படும் காதலின் முகிழ்ப்பும்,தீவிரமும்,தவிப்பும்,பிரிவும் என கனவுத்தன்மை விலகாத காட்சிகள் வழி பெண்மையின் காதல் அபோதமானது, தத்துவம் மற்றும் தர்க்கங்களின் நிழல் கவியாத தூரத்தில் அப்படியே படைத்து தரப்படும் பாங்கில் தீர்க்கமும் வலுவானதொரு பிரதியாக இக்கதை இருக்கிறது. பிரிவின் தருணத்தில் அவளின் காதலை உணர்ந்துவிடும் பெரியம்மா கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமிலிருப்பது கதையின் போக்கில் உறுத்தலின்றி பதிவாகையில் காதல் குறித்த அசலானதொரு பெண்ணிய கருத்தாடல் இயங்கும் பிரதியாக இக்கதை முழுமை பெறுகிறது.
’காட்டின் பெருங்கனவு’ கதையின் பெண்ணைப் போன்றவளே ‘மருதாணி’. ஆனால் மருதாணியின் உள வேட்கையும் காதல் அபோதமும் சமூகத்தின் பின்னணியில் ’மருதாணி’ கூடுதலானதொரு அர்த்த பரிமாணத்தை பெறுகிறது. இவ்வேட்கையைப் பின்பற்றிச் செல்வதன் எல்லா எதிர்மறை விளைவுகளையும் அறிந்தவளான மருதாணி அவை பற்றி கவலை எதுவும் கொண்டவளாகத் தெரிவதில்லை. ‘காட்டின் பெருங்கனவு’ கதையின் பெரியம்மாவைப் போல மருதாணியின் அண்டையில் வசிக்கும் பெண்களும் அவளது அந்தரங்க காதலை அறிந்தும் அதன் எதிர்மறை விளைவுகள் பற்றி அறிவுரை சொல்வதோ அல்லது அவளை கேடானவளாக கருதி விலக்குவோ இல்லை என்பது இங்கு முக்கியமாகக் காணத்தக்கது. எந்த வகையானாலும் பெண்ணின் காதலென்பது ஒழுக்கக் கேடாகவும் மீறலாகவும் சமூக கட்டுமானம் இக்கதையை வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. திருமண உறவை தாண்டிய தன் காதலை-இக்காதல் உண்டாக்கி வளர்ந்த சம்பவப் பின்னணி மருதாணியின் தரப்பை நியாயம் செய்பவையாக அமைந்திருக்கின்றன-அடைய முனைவதான மருதாணியின் செயல்களில் துளியும் அச்சமோ குற்றவுணர்வோ இல்லையென்பதோடு தன் காதல் உணர்வின் உந்துதலைப் பின்பற்றி செல்லும் மருதாணி அதற்கான வசைகலையும் அடிகளையும் தாய்வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அவமானத்தையும்கூட தன் அந்தரங்க காதலோடு சேர்ந்து செயல்களாக கருதி இயல்புகாக்கிறாள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.சங்கப் பாடல்கள் தொடங்கி ஆண்டாள் வழியாக மேலை நவீன இலக்கியங்கள் வரை நாம் கண்டு வந்திருக்கும் காதல் மேலிட்ட பெண்களை ஒரு கணம் பழம் வார்ப்புகளாக தோன்றச் செய்வதான வலுவுடனும் புத்தாக்கத்துடனும் இப்பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஒருவர் கூறவியலும்.
பெண்ணின் அகமன வாதைகளைப் பேசும் கதைகளாக ‘பன்னீர் மரத்தெரு’, ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ ஆகிய கதைகள் அமைந்திருக்கின்றன. ஒரு கதை சொல்லியாக தனது இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் தொலைக்காட்சி பெட்டியினால் மன சமநிலை குலையும் அகிலாவைப் பற்றி ‘பன்னீர் மரத்தெரு’ மனதோடு ஒன்றிய இயல்பான விசயங்களை துறந்து நவீன வாழ்வின் அர்த்தமற்ற ஜோடனைகளுக்கு தம்மை ஒப்புக் கொடுக்க முடியாதவர்களது- அதுவும் பன்னீர் பூக்களையும்,குழந்தைக் கதைகளையும் நேசிக்கும் தனிமை பீடித்த ஒரு பெண்ணின்- அகத்துயரம் பற்றியது. பெண்ணின் வாதைகள் கட்டமைக்கப்படும்விதம் ‘ரத்தத்தில் மிதக்கும் படுக்கையறை’ கதையில் சொல்லப்படுகிறது. கணவனது சுயநலத்துக்காக கவிதா திட்டமிட்டே பைத்தியமாக சித்தரிக்கப்படுகையில் உறவும்,சமூகமும்,நமது மருத்துவ முறைகளும் உதவி செய்ய அவள் நிஜமான பைத்திய நிலையைத் தொடர்கிறாள். சிறுநகரத்து மனநல மருத்துமனையில் தன்னைவிடவும் மோசமான நிலையில் காணப்படும் பெண்களை கண்டு பரிதாபப்படுபவளாக இருக்கும் கவிதா அவள் கணவனுக்கு வெறும் போக வஸ்து. தனது கள்ள உறவை கண்டு பிடித்துவிடும் அவளை பைத்திய பட்டமும் கட்டி பழி தீர்க்கிறான் கணவன். மாமியாரோ அவள் குழந்தையை அவளிடமிருந்தும் பறிக்கத் தீர்மானம் கொண்டவளாகயிருக்கிறாள். கவிதாவின் சித்தி கூட இரக்கப்படுவதைத்தாண்டி அவளை புரிந்து கொள்ள முயல்வதில்லை. இவ்வாறு எல்லாராலும் கைவிடப்பட்ட தனிமையின் பெருதுயர் சூழ அவள் நிஜமாகவே பைத்தியமாகிறாள். பெண்ணானவள் தனிமை, துயர் ஆகிய எந்தரக்கற்கள் கழுத்தில் கட்டப்பட்டு மாயும் யதார்த்த உலகின் ஒரு சிறு கீற்றாக இக்கதை பதிவு பெறுகிறது.
‘சூது நகரம்’, ’கழிவரை காதல் பிரதி’ கதைகள் நகர்சார்ந்த வாழ்வின் பின்னணியில் விளிம்பு மக்களை பேசும் வகையில் ஒன்றாக வைத்து பார்க்க வேண்டிய கதைகள். இரு கதைகளுமே ஒருவித இணைக்கோட்டு தன்மையான விவரிப்பனை உத்தியாக கொண்டிருப்பவை. நகரத்தின் இரக்கமற்ற முகமும் சூதுவாதற்று எவரையும் நம்பும் எளியவர்களை அது தன் சூழலுக்குள் சிக்க வைத்து கபளீகரம் செய்து விடுதலும் ’சூது நகரம்’ கதை. நகரத்தின் பெரு விரிவில் தமது முகங்களை மறைத்து ஆடும் கண்ணாமூச்சியின் முடிவில் நிஜம் தெரிய வரும்போது ஏற்படும் ஏமாற்றம் ‘கழிவரை காதல் பிரதி’ இரு கதைகளுமே ஒருவித நம்பிக்கை வறண்ட எதிர்மறையான தொனியில் புனையப்பட்டிருக்கின்றன என்ற போதும் நகர் சார்ந்த புறச்சித்தரிப்புகளும் கதை மாந்தர்களது சித்தரிப்பும் கதைகளை ரசிப்புக்கு உகந்ததாக்குகின்றன. ‘தரை தேடிப் பறத்தல்’ சுதந்திரம் என்னும் கருத்துருவாக்கத்தை வழமைக்கு மாறான பின்னோக்கிய உருவகமாக பறந்து கொண்டிருக்கும் பறவை தரையைக் கண்டுவிடுவதை ஏக்கமாக கொண்டிருப்பதாக புனைந்திருப்பது புதுமையானது. கருஞ்சிவப்பு,வெள்ளை,மஞ்சள்,நீல பறவைகள் வழியாக இக்கதை விரிவு பெறுகிறது.’வாழ்க்கை எதற்குள்ளும் ஒளிந்து கொள்வதல்ல. அது பறப்பது. சுயமாய் இருப்பது. இரை தேடப் பழகு. கூடு கட்டப் பழகு. பறவையாய் வாழப் பழகு’ நீலப் பறவை வெள்ளைப் பறவைக்கு அறிவுறுத்துகிறது. குறியீடானாலும் கதையின் பெண்ணிய பார்வை தீர்க்கமாக புலப்படும் வகையிலமைந்தகதை இது. ‘நதியில் மிதக்கும் கானல்’ கதை பெண்ணின் காதல் துயர் பற்றியதாக இருந்தபோதும் ‘காட்டின் பெருங்கனவு’ கதையினை போலின்றி கழிவிரக்கமும் புலம்பலுமான சோகமுமாக நிறைவடைகிறது. அங்கதம் தேர்ந்த புனைக் கதை எழுத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று.’பீத்தோவனும் கலைந்த காதலும்’ அங்கதத்தின் பாற்பட்ட எளிமையான, அடங்கிய அங்கதம் அமைந்த கதை.
பெண்ணிய நோக்கிலான புனைவெழுத்தினை சமரசமற்ற பாத்திர உருவாக்கங்களினால் புதிய தளங்களை நோக்கி நகர்த்தும் சந்திரா தீர்க்கமான பின்னல்களுடன் கதையை கட்டமைப்பதிலும் சரளமாக அதை சொல்லிப் போவதிலும் தனக்கிருக்கும் தேர்ச்சியை இத்தொகுப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார். கதை மொழிக்கு கூர்மையளிப்பது தனது கதை புலன்களை வாழ்வு குறித்த பலவித பார்வைகளுக்குமாக விஸ்தரித்துக் கொள்வது போன்றவற்றால் இன்னும் சிறப்பான கதைகளை அவர் எழுத முடியும். அந்த நம்பிக்கையினை இந்த தொகுப்பு குறைவில்லாது வழங்குவதாகவே இருக்கிறது.

’காட்டின் பெருங்கனவு’- சிறுகதைகள்(2009).ஆசிரியர்:சந்திரா,வெளியீடு:உயிர் எழுத்து பதிப்பகம்.9,முதல் தளம்,தீபம் வணிக வளாகம்,கரு மண்டபம்,திருச்சி 620 001.

நன்றி:கல்குதிரை
வேனிற் காலங்களின் இதழ்.

வியாழன், 5 மே, 2011

கார்ல் மார்க்ஸும் என் குடும்பப் புகைப்படமும்.



எனக்கு புகைப்படம் எடுத்துக்கொள்வது எப்போதும் விருப்பமானதாக இருந்தது இப்போதும் இருக்கிறது. விவரம் தெரிந்த நாளிலிருந்தே ’போட்டோ புடிக்கனும்’ என்று அப்பாவை நச்சரித்துக்கொண்டிருப்பேன். அம்மா, ,அப்பாவின் இளவயது புகைப்படங்கள் ஒன்றிரண்டு தவிர அக்கா, அண்ணன், என்னுடைய எந்தப் புகைப்படங்களும் வீட்டில் இல்லை. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அப்பா ஒரு சிறு வீட்டைக் கட்டினார். புது வீட்டுக்கு குடிபோவதற்கு முன் அப்பா ஒரு நாள் ’எல்லாரும் போட்டோ புடிங்க கிளம்புங்க’ என்று சொல்லி, ஊரில் அப்போது பிரபலமாக இருந்த துரை ஸ்டூடியோவுக்கு எங்களையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போனார் . எங்களுடைய முதலும் கடைசியுமான குடும்ப படத்தை அங்கே எடுத்துக்கொண்டோம். அதற்குபின் தனிப்பட்ட முறையில் நிறையப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோமே தவிர நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் எடுக்க வாய்க்கவில்லை. அப்போதெல்லாம் புகைப்படத்திற்குச் ஃபிரேம் போடுவதற்கு முன் பாஸ்போர்ட் சைஸில் .புகைப்பட நகலைக் கொடுப்பார்கள். அதை பார்த்து சரியாக இருக்கிறது என்று சொன்னால் பின்பு அதை கண்ணாடி போட்டு ஃபிரேம் பண்ணிக்கொடுப்பார்கள். அந்த அளவிற்கு புகைப்படம் என்பது அரிதான ஒன்றாக இருந்தது. நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருந்த குடும்பப் படம் மற்றும் அம்மா அப்பா தனியாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இதோடு சேர்த்து இன்னும் மிகப்பெரிய அளவில் இருந்த ஃபிரேம் செய்யப்பட்ட ஐந்து புகைப்படங்களையும் கொண்டு வந்தார் அப்பா. அதிலிருந்த யாரையும் எனக்குத் தெரியவில்லை. எல்லாம் தனித் தனி ஆண்களின் புகைப்படம். அம்மா அப்பாவை திட்டிக்கொண்டிருந்தது. ’இப்படி பணத்தை தண்டமா செலவு பண்ணுவாங்களா?இவங்கெல்லாம் வீட்ல மாட்டி வச்சா சோறு தானா கிடைக்குமா’ என்று ஏகமாறி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. ’உனக்கெல்லாம் என்ன கூறு இருக்கு. இவகெல்லாம் எம்புட்டு பெரிய தலைவர்கள்னு உனக்கு தெரியுமா?. எம்புட்டு மக்களை காப்பாத்தியிருக்காங்க தெரியுமா? என்று பதிலுக்கு அப்பா சொல்ல ’சம்பாதிக்கிறதெல்லாம் இப்படியே செலவு பண்ணினா நடுத்தெருவிலதான் நிக்கனும்’ என்று சொல்லிவிட்டு ’இனி சொல்லி ஆகப்போறது ஒன்னும் இல்லனு’ அம்மா அமைதியாகப் போய்விட்டது. அப்பாவிடம் அவர்கள் யார் என்ற கேள்வியை நான் ஆர்வத்தோடு கேட்க பசி, புரட்சி,சோசலிசம்,பணக்காரன்,ஏழை,விவசாயி என்று வார்த்தைகள் வருமாறு அப்பா ஏதோ சொல்லிவிட்டு எல்லா புகைப்படங்களையும் சுவரில் மாட்டினார். மிகப்பெரிய தாடியோடு இருந்தவரின் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பெயரைக் கேட்டேன் காரல் மார்க்ஸ் என்றார் அப்பா. எங்க வீட்டில் இருந்ததிலேயே மிகப்பெரிய புகைப்படம் அதுதான். பின்பு இரவு நேரங்களில் அந்தப் புகைப்படங்களைக் காட்டி அப்பாவிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்படி கேட்ட நாள்களில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஸ்ட்ராஸ்கி, ஜீவானந்தம் இவர்கள்தான் புகைப்படத்தில் இருப்பவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அந்தப் பெயர்கள் எனக்கு பழக்கப்பட்ட பெயர்களாக இருந்தன. ஆம் என் அண்ணனுக்கு லெனின் என்று பெயர் வைத்திருந்தார் அப்பா. அதேபோல் உறவினர்கள் பலருக்கும் மார்க்ஸ்,ஸ்டாலின்,ட்ராஸ்கி,ஜீவானந்தம் என்ற பெயர்கள்தான் சூடப்பட்டிருந்தன. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்ய புரட்சி, கம்யூனிசம் பற்றி அப்பா சொல்வது லேசாக புரிந்தது. அப்பா கம்யூனிசத்தை கரைத்து குடித்தவர் கிடையாது. அடிப்படை அளவிலேயே தெரிந்து வைத்திருந்தார். கட்சி வகுப்பில், அலுவலகத்தில் பேசியவற்றை தெரிந்துகொண்டு அதையே எனக்கும் சொன்னார். அவர் பேச்சின் மூலம் ஏற்றத்தாழ்வு, அதிகாரம் இந்த இரண்டுக்கும் எதிரான மனநிலையை என்னால் சிறுவயதில் உணர்ந்து கொள்ள முடிந்தது. மற்ற என் தோழிகளைவிட சமூகத்தை புரிந்து கொள்ள எனக்கு அடிப்படையாக இருந்ததும் அதுவே. அது ஒட்டுமொத்தமான புரிதல் அல்ல. ஆனால் மற்ற பெண் பிள்ளைகளிலிருந்து மாறுபட்டு யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கேயோ கிராமத்தில் அடையாளமற்று இருந்திருக்க வேண்டிய என்னை மாற்றியதும் அதுதான்.அப்பா கிராமத்து வீட்டைவிட்டு சென்னைக்கு என்னுடன் வந்ததும், வீட்டை ஒழுங்க செய்கிறேன் என்று அண்ணன் வீட்டில் இருந்த மார்க்ஸ்,லெனின் படங்களோடு எங்கள் குடும்ப படத்தையும் சேர்த்து அப்புறப்படுத்திவிட்டது. எங்கள் வீட்டுச் சுவர்களில் உறவினர்களைப் போல் தொங்கிக்கொண்டிருந்த அவர்களைப் பற்றிய வரலாற்றை,புரட்சியை என் அண்ணன் குழந்தைகள் மற்றும் என்னுடைய குழந்தைகள் யாரும் தெரிந்து கொள்ளவில்லை. அப்பாவைப்போல் அவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கும் ஆர்வமும் இல்லை எனக்கு. புகைப்படம் இருந்திருந்தால் அவர்கள் யார் என்று குழந்தைகள் தானே கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள். இப்போது வம்படியாக அவர்களை அழைத்து கம்யூனிசம் புரட்சி என்று பேச ஆரம்பித்தால் அழுதுகொண்டு ஓடிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மறைந்துபோன புகைப்படக் கதைகளைப் பற்றிச் சொல்வதா? வேண்டாமா? அல்லது அவர்களுக்கு விருப்பம் இருந்தால் தானாக தெரிந்து கொள்ளட்டுமா? என்று யோசித்தே எதையும் சொல்லாமல் இருக்கிறேன். நான் தெரிந்து கொண்ட அடிப்படை விசயங்களைக்கூட காலம் பலமடங்கு முன்னேறியும் அவர்கள் தெரிந்த கொள்ளாமல் இருப்பது வருத்தம்தான். ஐந்தாம் வகுப்புகூட படிக்காத என் அப்பா எனக்கு கற்றுக்கொடுத்தைக்கூட நான் என் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காமல் இருப்பது குற்ற உணர்வாகத்தான் இருக்கிறது. இப்போது அப்பாவும் இல்லை அவர்களுக்குச் சொல்ல.

வெள்ளி, 18 மார்ச், 2011

இசைபடவும் ஒளிபடவும் வாழ்தல்

பின்னிரவு மழைக்கால வாசனையையும் கோடை மழையின் கொண்டாட்டமும் மறையாத ஊரை ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கிறது வெப்பத்தை வன்மமாக்கி கரைத்தூற்றும் இப்பெருநகர். மூர்க்கமாக அடித்துத் துரத்தும் பால்ய சிநேகிதர்களையும், என்றோ சாணம் தெளித்த தெருவுகள் இன்று சிமெண்ட்டுகளாகி உருவழிந்த தெருக்களில் ஏதேச்சையாக சந்திக்கையில் முகத்தை மறைத்துக்கொண்டோ அல்லது தன் செயலுக்காக வெட்கப்பட்டுக்கொண்டோ லேசான சிரிப்புடன் கடந்து செல்கையில் அவர்கள் அடித்த ரணம் சிவக்க குறுகுறுக்கிறேன் சந்தோசமாக. என் புழுதி படிந்த சாலையில் மாடுகளை கண்டு பயந்து விலகி நடந்து போன காலம் கண்ணிமைகளில் உயிர் பிடித்து வைத்திருக்கிறது பழந்தெருஞ் சாலையின் சாயலை கொஞ்சமாவது கொண்டிருக்கும் தெரு. தட்டான்கள் பறந்துகொண்டிருக்கும் பொன்வண்டும் மின்மினிப் பூச்சியும் தன்னியல்பில் மின்னிக்கொண்டிருக்கும். என் வருகையை ஒரு நாளும் அவை வெறுப்பதும் இல்லை எனக்காக காத்திருப்பதும் இல்லை. அன்பு இழையோட என்னை கிறுக்கு பிடிக்கச் செய்வதும் இல்லை. தனக்கான ஒளியோடும் பாடலோடும் இசைந்து எவற்றின் கட்டளைக்கும் காத்திராது இசைபடவும் ஒளிபடவும் வழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர் ஜனத்திரள் காட்டில் எப்போது மௌனம் வன்மம் துரோகம் விளைவிக்கும் கண்களை கண்டு கண்டு என்னுள் சேர்ந்திருக்கிறது ஓராயிரம் கரு வலி. தேரோடும் வீதியில் கைகோர்த்து நடப்பதே வாழ்வின் தீராத ருசியைப் போக்கும் நிலையும் காலாவதியாகிவிட்ட நிலையில் தட்டான்களின் ரீங்காரத்தின் மெல்லிய இசையை ஆன்மாவில் கரைத்து ஆற்றங்கரையில் பறக்கும் பட்டாம்பூச்சியின் வர்ணங்களை ஒளியாக்கி கண்களில் நிரப்பி இசைபடவும் ஒளிபடவும் வாழலாம் இனி.

வியாழன், 17 மார்ச், 2011

ஓவியத்தில் மறைந்துகிடக்கும் தற்கொலை

நீங்கள் அந்த தற்கொலையை ரசிக்காமல் இருக்க முடியாது.
இதயத்தை பிடுங்கி எறிவதைப் போன்ற அல்லது
உங்கள் அழகியலை தூண்டக்கூடிய சாவகாசமான ,
உங்களை எந்த குற்ற உண்ர்விலும் ஆழ்த்தாத
அழகான தற்கொலை அது
ஆம்
இளம் சிவப்பும் ஆரஞ்சு கலந்த மஞ்சளும் சூழ்ந்த அழகான அந்திச் சாயலில்
வண்ணங்களை உள்ளிழுத்து பயிர்பருத்த கோதுமை வயலில்
எல்லையற்ற நீண்ட சமவெளியில் நடுவில் ஓடும்
மனிதர்களற்ற நீண்ட ரயில்பாதை.
வான்கோ தன் ஓவியத்தில் வரைந்திருக்கலாம்
அல்லது அதன் தோல்வியை கண்டிருந்திருக்கலாம்
ஏகாந்தத்தில் மிதந்த பெண் ஒருத்தி
திறந்த ரயில் கதவின் கம்பிகளை பிடித்தவாறு
இயற்கையின் அத்தனை அழகியலும் கண்டு திருப்பியுற்றபின்
காற்றின் மிதக்கும் அவள் ஆன்மா நிறைவடைந்த கணத்தில்
அத்தனை அழகியலை பூரணமடையச் செய்ய
அவளிடம் இருப்பது ஒரே வழிதான்
வெள்ளை வண்ண உடையில்
இதுவரை யாருமே அடைய முடியாத அழகான கோணத்தில்
ஒரு பறவையைப்போல் பறந்து
கோதுமை வயலில் உடல்பரப்பி வீழ்ந்து கிடப்பது
அது உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாத வரைபடம்
என்பதில் வியப்பில்லை
ஆனால் எவராலும் வரையப்பட முடியாதது
அப்படியே முனைந்தாலும்
அந்த இளம் வெள்ளை உடைக்காரியின் பறவையின் உடல்
தூரிகையில் மிதந்துகொண்டிருக்குமே தவிர
உங்கள் ஓவியங்களில் அரூபமாக மட்டுமே
ஒளிந்துகிடக்கும்
என் கவலையெல்லாம்
அந்த அழகான தற்கொலையை உங்களால்
ஞாபகத்தில் வைத்துகொள்ள முடியாதது என்பதுதான்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

தற்கொலைக்கு முன்னான அழகிய நிகழ்வு

வெயில் சாலையின் ஒரத்தில் படர்திருக்கும் நந்தியா வெட்டை செடியிலிருந்து கல்யாண்ஜியின் ஞாபகத்தோடு ஒரு பூவை மட்டும் பறித்து கவிதை முகமற்ற தோரணையில் பேருந்து நிலையத்தில் வெயில் முகத்தோடு காத்திருக்கையில் உங்களில் கையிலிருக்கும் பூவிற்காக ஒருவன் சிரிக்கும் போது அவனிடம் ரகசிய அன்பினை கொள்வீர்கள். பேரூந்து ஏறும் அவசரத்தில் நந்தியா வெட்டை எங்கேயோ விழுந்துவிட்டதுகூட தெரியாமல் அந்த சிரித்தவனின் ஞாபகத்தோடவே பேரூந்தில் ஏறிக்கொள்வீர்கள். அங்கு உங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நந்தியாவட்டையின் அதிர்ஷ்டம்தான். தழும்பி கிடக்கும் மஞ்சள் வெயிலில் உங்கள் படர்ந்து மினுமினுக்கும் கூந்தலை முன்றடி தள்ளியிருந்து ரசிக்கும் ஒருவனை ரகசியமா காதல் கொள்வீர்கள். இறங்கும் தருணத்தில் இளையராஜா பாடலைப் பாடிச் செல்பவனை பிந்தொடர்ந்து செல்ல விரும்புவீர்கள்.யாருமே உங்களை கவனிக்காத பேரூந்து பொழுதில் பெரும் துயரம் கொள்வீர்கள். பேரூந்திலிருந்து இறங்கி உங்கள் தெருவில் நடந்துவரும் தருவாயில் காற்றில் பொன்னிறத்தில் மிதக்கும் உங்கள் கூந்தல் குறித்து நீங்களே பெருமை கொள்வீர்கள். அதை ரசிக்க ஒருவரும் இல்லாமல் போகும்போது சரியாக உங்கள் வீட்டின் கதவை திறக்கும் குழந்தையை உதட்டில் நீங்கள் இதுவரை எவருக்குமே அளித்திடாத ஆழ்ந்த முத்தத்தை கொடுப்பீர்கள். பின் உங்கள் அறையில் நுழைந்து அன்றைய சந்தோச ஞாபகங்களில் ஒவ்வொரு தூக்க மாத்திரையையும் எடுத்து விழுங்குவீர்கள். பின் போர்வையால் இறுக்க மூடி படுத்துக்கொள்வீர்கள்.

புதன், 9 மார்ச், 2011

வெற்று வெளி



இளம் மஞ்சள் மாலையில்
பறவையைப்போல் திக்கற்று பறக்கலாம்
மாலை கருகும் நேரத்தில்
அடையாளமற்ற கூட்டில்
முழுஇருளின் கறுமையில் கரையலாம்
...இருண்மையின் தனிமை அன்றைய
பித்துநிலையை சமன்செய்யும்
விடியும்
மீண்டும் பித்துக்கொள்ளலாம்
மீண்டும் சமனடையலாம்
பித்து சமன்
வாழ்வின் இருபோக்கு
இதுதவிர்த்து சுவாரஸ்யமற்றே இருக்கிறது
வெற்று வெளி.

(ஸ்ரீநேசனின் ’ஒரு மலையின் மாலை’ பாதிப்பிலிருந்து உருவான கவிதை.)

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

தொலைவதுதான் புனிதம் ....


-சந்திரா-
பாண்டிச்சேரியில் மதுபானம் மற்றும் நடன வசதி கொண்ட நட்சத்திர ஹோட்டலில் நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அன்றைய செலவில் ஐந்து பைசாவைக் கூட நான் கொடுக்கப் போவதில்லை. நண்பர்கள் அப்படி என்னிடம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்கள் எல்லோரும் என் கல்லூரி நண்பர்கள். என்றாவது ஒரு சனிக்கிழமை ‘மச்சி இன்னைக்கு ஈவினிங் பார்ட்டிடா’ என்பார்கள். முன்பெல்லாம் அவர்கள் அப்படி அழைக்கும்போது மறுப்பேதும் சொல்லாமல் ஓடிவிடுவேன். ஆனால் இப்போதுதான் நான் சினிமாவில் உதவி இயக்குனாராக வேலைக்கு சேர்ந்திருப்பதால் என்னால் முன்பு மாதிரி கூப்பிட்டவுடன் ஓடிவிட முடியாது. நான் வேலைக்குச் சேர்ந்திருக்கும் புதுமுக இயக்குனர் எப்போது அழைப்பார் எப்போது விடுவார் என்றே தெரியாது. நண்பர் ஒருவர் அவரிடம் அறிமுகபடுத்திவைத்து வேலைக்குச் சேர்த்துவிட்டார். என்னுடைய விஷுவல் கம்யூனிகேசன் படிப்பும் ஸ்டைலான ஆங்கிலமும், அவரிடமே சிகரெட் வாங்கி புகைப்பிடித்த பாசாங்கற்ற குணமும் பிடித்துப்போனதாக இயக்குனர் என் நண்பரிடம் சொல்லி இருக்கிறார். என்னுடைய இதே குணத்தால் ஒரு பெரிய இயக்குனர் என்னை வேலைக்கு சேர்க்க முடியாது என்று சொன்னது தனிக்கதை. இத்தனைக்கும் அவரிடம் நான் சிகரெட் கூட கேட்கவில்லை. அந்த பெரிய இயக்குனர் ஆபிஸுக்கு இரண்டு மூன்று தடவை போனேன். அப்போதெல்லாம் அவர் அலுவலகத்தில் இல்லை. முதல் தடவை போனபோது ஆபிஸ் பாய் அடிக்காத குறையாய் அவர் இல்லை என்று கடுமையான முகத்தோடு பிச்சைக்காரனை விரட்டுவதுபோல் துரத்திவிட்டான். முதலில் எனக்கு ‘இதென்னடா நான்சென்ஸ்’ என்று எரிச்சலாகவும் அசூசையாகவும் இருந்தது. எனக்கு இயக்குனராக ஆசை. அதற்கு பெரிய இயக்குனரிடம் வேலை பார்த்தால்தான் சாத்தியம் என்பதால் வேலை தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் பேசியதால் சில இடங்களில் வேலை இல்லை என்பதை மரியாதையாகச் சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள். சில இடங்களில் மெடிக்கல் ரெப்பை பார்ப்பதுபோல் விநோதமாக பார்த்தார்கள். ஆகமொத்தம் வாய்ப்பு இல்லை. விண்ணப்பம் போடாமல் வாசலில் கதியே என்று கிடந்து வேலை தேடுவது சினிமாவில் மட்டும்தான் நடக்கும். பின்பு சினிமாவில் இருக்கும் சில நண்பர்கள் “இப்படி போய் அவங்ககிட்ட ஆங்கிலத்தில பேசுனா எப்படி வேலை குடுப்பாங்க.இங்கே பாதி இயக்குனருக்கு ஆங்கிலம் தெரியாது. அவஅவன் நல்ல சட்டை போட்டுட்டு போயே வேலை தேடமாட்டான். நீயி என்னாடானா ஜீன்ஸ்,ஸ்டைலான டீ.சர்ட்,ஷு, ஆங்கிலம் இப்படி போய் நின்னா எப்படி வேலை தருவான். அதனால என்ன பண்ற ஆங்கிலத்தை குப்பையில போடு, சாதாரண செக்டு சர்ட் ஒரு அழுக்கு ஜீன்ஸ் போட்டுக்க, ரெண்டு நாளா சாப்பிடாதவன் மாதிரி முகத்தை வச்சுட்டு வேலையத் தேடு’ என்றார்கள். அவர்கள் ஆலோசனைப்படியே நடந்தேன். தேவை இருந்தால் மட்டுமே ஆங்கிலத்தை பயன்படுத்தினேன்.


இரண்டாவது தடவையாக அந்த பெரிய இயக்குனரை பார்க்கப்போனேன். அவருடைய அப்பா இருந்தார். “ஐய்யா வெளியே போயிருக்காங்க. ஐய்யா நாளைக்குதான் வருவாங்க. ஐய்யாவை நாளைக்கு பார்க்கலாம்”. எத்தனை ஐய்யா! அப்பதான் மற்றவர்களுக்கும் மகன் மேல் மரியாதை வரும் என்பதால் அப்படி அழைக்கிறாராம். மூன்றாவது தடவை போனபோது அந்த பெரிய இயக்குனர் வரவேற்பரையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். சிலநேரங்களில் இயக்குனர்கள் இப்படி இயல்பாக உலாத்துவதும் உண்டு. என் அதிர்ஷ்டம் அவரை வெகு சீக்கிரம் பார்த்துவிட்டேன். வணக்கம் சொன்னவுடனே ‘என்ன’ என்றார் மிகப்பெரிய அதிகாரத் தோரணையில். நான் விசயத்தை சொன்னதும் ‘என்ன படிச்சிருக்க’ என்றார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழிறங்கி பவ்யமாக(எல்லாம் நண்பர்களின் டிரெயினிங்) விஷுவல் கம்யூனிகேசன் என்றேன். அவர் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு, அப்போது அவர் முகம் மிகவும் கோரமாக இருந்தது. ‘இலக்கியத்தில என்ன படிச்சிருக்க’ என்றார். இலக்கியங்கிற வார்த்தையை தவிர எனக்கு ஒன்னும் தெரியாது. கொஞ்சம் நேரம் கேனப்பயல் மாதிரி முழித்துவிட்டு, ‘நிறைய வெளிநாட்டுப்படம் ஆங்கிலப்படம் பார்ப்பேன் சார்’ என்றேன் சிறிது நம்பிக்கையுடன். அப்புறம் அவர் ஆரம்பித்தார் ‘யோவ் உங்கள மாதிரி ஆட்கள் சினிமாவுக்கு வர்றதாலதாயா சினிமா கெட்டு கெடக்கு. ஆங்கிலப்படத்தை உருவி அப்படியே படம் எடுக்கிறது. ஒரு படம் வேலை செஞ்சதும் பெரிய நடிகனுக்கு கதை சொல்லி மசாலா படம் எடுக்கிறது. சினிமாவை வணிகமாக்கி கெடுத்திட்டாங்க. அந்த வரிசையில நீயூம் சேரப்போறியா. போ போ..போய் ஜெயகாந்தன்,புதுமைபித்தன்,சுந்தரராமசாமி,கோணங்கி இவங்களெல்லாம் படி அப்புறம் உதவி இயக்குனர் வேலை தேடு’. “அடப்பாவிங்களா கவுத்துபுட்டாங்களே விஷுவல் கம்யூனிகேசன் படிச்சா ஈஸியா வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்கே.அப்ப இவங்களெல்லாம் படிக்கனுமா” என்று எனக்கு அலுப்பாகிவிட்டது. அப்புறம் கொஞ்சநாள் புதுமைபித்தனோடும், சுந்தரராமசாமியோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன்.

“பார்ட்டி,கேர்ள் ப்ரண்ட்ஸ், ஜாலியான சினிமா, கிதாருன்னு சுத்திக்கொண்டிருந்தவன். பனி படர்ந்த பாரிஸ் வீதியிலே பாக்கெட்டுல கையைவிட்டுட்டு ஏகாந்தமாக நடந்து போற மாதிரி கனவு கண்டேனே எல்லாம் கனவாகவே போய்விடுமோ. கேன்ஸ், பெர்லின் திரைப்படவிழாவுக்கெல்லாம் போக முடியாதோ” என்ற பயத்தில் மூலையில் உட்கார்ந்து பரிட்சைக்கு படிப்பதுபோல் இலக்கியம் படித்தேன். அந்த நாள்களில் சில நேரங்களில் தமிழ் படிக்கும் மாணவனைப்போல என்னை உணர்வேன். ஆனால் ஒரு விசயம் அதிசயமாக நடந்தது. சில எழுத்தாளர்கள், புத்தங்கள் நிஜமாகவே எனக்கு பிடித்து போய்விட்டன. ஜி.நாகராஜன், கோபி கிருஷ்ணன் படித்துவிட்டு கொஞ்சநாள் பைத்தியமாக சுத்தினேன். கோபி கிருஷ்ணன் இறந்து போனது, வாழ்வில் அவருடைய வறுமை, மனப்பிறழ்வு இதையெல்லாம் கேள்விபட்டதும் இன்னும் அவர் நெருக்கமாகிவிட்டார். ஆல்பர் காம்யூவில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். எப்போதாவது தலைதூக்கும் குற்ற உணர்ச்சி அந்நியனை படித்ததும் விலகியது. அப்படியே ஏதாவது கதை கிடைத்து ஸ்கிரிப்ட் எழுதிவிடலாம் என்றதால் மனம் போன போக்கில் குற்றங்களுக்கான பின்னணியை ஆராயத் தொடங்கினேன். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கைகூடாது என்பதால் மீண்டும் படம் பார்ப்பது,புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்தினேன். புத்தங்கள் எனக்கு வேறொரு வாழ்க்கையை தெரியபடுத்திக்கொண்டிருந்தன. படிப்பதை மிக முக்கியமான வேலையைச் செய்வதைப் போல் உணர்ந்தேன். எனக்குள் இருந்த நவீன நாகரீகப்பையன் ஒழிந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போதுதான் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு படித்தேன். படித்து முடித்ததும் எனக்குள் அடியாழத்தில் பதுங்கிக் கிடந்த குற்ற உணர்ச்சி மேலெலும்பி வந்தது. முதலில் அது என்னவென்று தெரியவில்லை. உள்ளுக்குள்ளே உருத்திக் கொண்டே இருந்தது. இனம் காண முடியவில்லை. தூங்கவே பயபட்டேன். என்னவென்று தெரியாமலே இப்படி வேதனையாக இருக்கிறதே அதைத் தெரிந்து கொண்டால் நினைக்கவே பயங்கரமாக இருந்தது. கொஞ்சநாள் கடும் யோசனைக்குப்பின்னே மிகப்பிரயத்தனப்பட்டு குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொண்டு வேலையைத் தேடிக்கொண்டிருந்தேன்.

பாலியல் விசயங்களை நவினமாக படம் எடுத்த இயக்குனர் ஆபிஸுக்கு தினமும் வாய்ப்பு தேடி போய்க்கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியிலிருந்து பார்த்த அவர் என்னை மேலே வரச்சொன்னார். என்னைப்பற்றி அக்கறையோடு விசாரித்தார். என்னிடம் கலகலப்பாகவே பேசிக்கொண்டிருந்தார். ‘எதில வந்தே’ என்றார். ‘பஸ்ல சார்’ என்றேன். ‘பைக் இல்லையா’ என்றார். ‘இல்ல’ என்றேன். பைக்கை வீட்டில் வைத்திருந்தேன்.அதுவும் நண்பர்களின் ஆலோசனைதான். ‘நானும் உன்னை மாதிரிதான் உதவி இயக்குனரா வேலை தேடுற காலகட்டத்தில பைசா இல்லாமத்தான் அலைஞ்சிருக்கேன். ஆனாலும் கார்ல போய்தான் வாய்ப்புத் தேடுவேன். எப்படி’ என்றார். ‘எப்படி’ என்று அவர் கேட்கும்போது குழந்தைகளிடம் மேஜிஸ்யன் கேட்பதைப்போல் முகத்தை வைத்திருந்தார்.அவர் முகபாவம் எனக்கு சிரிப்பை வரவைத்தாலும் அடக்கிக்கொண்டு. தெரியவில்லை என்பதை ஒரு புன்னகையாக வெளிப்படுத்தினேன். பின்பு அவரே சொல்ல ஆரம்பித்தார் ‘லிப்ட் கேட்டு கார்ல போய்தான் இயக்குனர்கள் ஆபிஸ் வாசல்ல இறங்குவேன்’ என்றார். “நமக்கெல்லாம் பைக்கில லிப்ட் தரமாட்டாங்க இவர் கார்ல போயிருக்கார் பெரிய விசயம்தான்” என்று நினைத்துக்கொண்டேன். ‘கெத்தா போனாதான் சினிமா காரனுங்க மதிப்பானுங்க. என்னைக்கும் என் ஸ்ர்டுல ஒரு சின்ன கசங்கல் கூட இருக்காது’ என்றார். எனக்கு உண்மையாகவே குழப்பமாகத்தான் இருந்தது. அன்றைக்கு இன்னும் அழுக்கான சட்டையும் பேண்ட்டும் தாடி வேற வைத்திருந்தேன். பரதேசி மாதிரிதான் அவருக்கு தெரிந்திருக்கும். அப்ப கண்டிப்பாக வேலை கொடுக்கமாட்டார் என்று தெரிந்தது. அவரோடு சேர்ந்து என்னைச் சாப்பிடச் சொன்னார். உண்மையாகவே நான் சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர் என்னிடம் காட்டும் இரக்கத்தை துண்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை பாவம் பார்த்து வேலை கொடுக்கலாம் என்று அமைதியாக இருந்தேன். வேலை கிடைக்குமா இல்லையா என்பது மட்டும்தான் அப்போது என் கேள்வியாக இருந்தது. கடைசியாக அந்த இயக்குனர் ‘தம்பி எங்கிட்ட பத்துபேரு வேலை பார்க்கிறாங்க.இப்ப உன்னை வேலைக்கு சேக்க முடியாது அடுத்த படத்தில எவனாவது வெளியே போவான், அப்படியே கம்யூனிகேசன்லே இரு அடுத்த படத்தில சேர்த்துக்கிறேன்’ என்றவர் ஒரு உதவி இயக்குனரை அழைத்து பைக்கில் என்னை பஸ் ஸ்டாப்பில் விட்டுவரச் சொன்னார். “வானத்தில வீடு கட்டுனாலும் கட்டிலாம் ஆனால் சினிமாவில சேர முடியாது போல” என்று நினைத்துக்கொண்டு போனேன்.

புதுமுக இயக்குனர் உண்மையாகவே என்னிடம் திறமை இருப்பதாக நம்பினார். ஆங்கிலம், இலக்கியம், வெளிநாட்டுப் படங்கள் என்று இண்டெல்ஷுவலாகவே பேசிக்கொண்டிருப்பார். சில நேரங்களில் விதண்டவாதமாகவே எதிர்வாதம் வைத்துக்கொண்டிருப்பார். ஆனாலும் அவர் உணர்வுபூர்வமாக சில விசயங்களை அணுகியதால் அவரோடு கொஞ்சம் எனக்கு இணக்கமாக இருந்தது. மிகுந்த கடமை உணர்வோடு இரவு பகல் பாராது அவரோடு கதை டிஸ்கஸனில் இருந்தேன். அவர் ஒருநாளில் ஒரு தடவை மட்டுமே சாப்பிடுபவராக இருந்தார். சிகரெட் டீ மட்டும் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை. முதலில் அது எனக்கு கடினமாக இருந்தது பின்பு அவருடைய பழக்கத்திற்கு ஏற்ப பழகிக் கொண்டேன். அவரிடம் வேலை பார்த்த மற்ற உதவி இயக்குனர்களும் அப்படியே ஆகிப்போனார்கள். சில நேரங்களில் அது எனக்கு அயர்ச்சியூட்டுவதாக இருக்கும். அப்போதுதான் நண்பர்கள் என்னை பாண்டிச்சேரிக்கு பார்ட்டிக்கு அழைத்துப்போனார்கள்.

அறையெங்கும் உற்சாகம் பொங்கி வழிந்தது. டி.ஜே சிரித்த முகத்துடன் இசையை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தான். ஜாக்,ராப், என்று எல்லாவற்றிலிருந்தும் உற்சாகம் பொங்கும் துள்ளல் இசையை ஒலிபரப்பச் செய்தான். இசையில் எங்கும் தொய்வு ஏற்படாமல் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை அவன் பாடல்களை மாற்றிய விதத்தைப் பார்த்தபோது ஒரு இசைக்கலைஞனைப் போலவே தோன்றினான்.

நண்பர்கள் நாங்கள் நான்கு பேரும் ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்தோம். தறிகெட்டு தொடர்பின்றி ஓடிக்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. நண்பர்கள் போதையின் களிப்பை முழுவதுமாக உணர்ந்துகொண்டிருந்தார்கள்…
நடன அரங்கில் ஆண்களும் பெண்களும் இசைக்கேற்ப பின்னிப்பிணைந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். இசையில் கரைந்து வெறித்தனமாக ஆடிக்கொண்டிருந்த பெண் லாவண்யாவைப்போல் இருந்தாள். குட்டை முடி, சின்ன டீ சர்ட், இடுப்பு தெரியும் பேண்ட் அவளாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து, நண்பர்களோடு பேச்சில் கவனம் செலுத்தினேன். இருந்தும் ஏதோ உந்த மீண்டும் அவளைப் பார்க்கத்தொடங்கினேன். இப்போது அவள் நடன அரங்கிலிருந்து டேபிளுக்கு வந்தாள். ஆண்களும் பெண்களும் ஐந்தாறு பேருக்கு மேல் அந்த டேபிளில் இருந்தார்கள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாக என்னைப் பார்த்தவள் உற்சாகத்தோடு ஒரு பெரிய ஹாய் சொல்லி என்னருகே வந்தாள். லாவண்யாவேதான் இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு மாறிபோயிருக்கிறாள். என்னால் அவளோடு இயல்பாக பேச முடியவில்லை. உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு வலியை உணர்ந்துகொண்டிருந்தேன். அவள் கடகடவென்று பேசிக்கொண்டிருந்தாள். மிக சந்தோசமானப் பெண்ணைப்போலத் தோன்றினாள்.


கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும்போது அவளை முதல் முறையாகச் சந்தித்தேன்...சுருள் சுருளான என் முடி எப்போதும் நண்பர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது. நகரத்தின் நாகரீகம், ஸ்டைல், பரப்பரப்பில் என்னை முழுமையாக்கி கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் கல்லூரியில் படிக்க நகரத்திற்கு வந்தேன். நான் பிறந்தது கிராமம் என்றாலும் அப்பா என்னை சிறுநகரத்தில் இருக்கும் ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைத்தார். சிறு வயதிலிருந்த ஆங்கிலத்தின் மீதும் நகரத்தின் மீதும் நாட்டம் அதிகமாகிருந்தது. பள்ளி இறுதி நாள்களில் எல்லாம் ஊரில் இருப்பதை அபத்தமாக நினைத்தேன். அதுவும் என்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் ரசித்த சினிமாக்கள் இன்னும் துக்கமாக இருந்தது. ஆங்கிலப்படங்களை பார்க்க ஏங்கினேன். சென்னைக்கு வந்த புதிதில் சத்யம் சினிமா தியேட்டரில்தான் குடியாய்க் கிடந்தேன். கொஞ்ச நாள் தமிழ்படம் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. நான் படித்த கல்லூரியிலும் நாகரீக வாசம் அதிகமாக இருந்தது. பக்கத்தில் நடமாடும் உண்மையான மனிதர்களை, உலகத்தைவிட்டு வேறொரு உலகத்தில் வாழ்ந்த காலம் அது. சனிக்கிழமையானால் பார்ட்டி கொடிகட்டி பறந்தது. ஊரிலிருந்து படிப்பு,விடுதிக்கென்று தேவையான பணம் வந்தது. பார்ட்டி செலவுகளை பணக்கார நண்பர்கள் பார்த்துக்கொண்டார்கள். சீக்ரெட் பார்ட்டி அப்போது எங்களிடையே பிரபலமாக இருந்தது. மாதத்திற்கு ஒரு முறை ஈ.ஸி.ஆர் ரோடு, பாண்டிச்சேரியில் ஒரு ஃபார்ம் ஹவுஸை நண்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். அங்கே பெண் தோழிகளோடு ஆஜராகிவிடுவோம். பெண் தோழிகளும் குடிப்பார்கள். சில பெண்கள் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு குடிப்பார்கள். ஆனால் யாரும் பெண்களிடம் வரம்புமீறி நடப்பதில்லை.மனம் விரும்பினால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் செய்பவர்களாகவே அந்தப் பெண்கள் இருந்தார்கள்.


அந்த சமயத்தில்தான் எங்கள் கல்லூரியின் இசைக்குழு நண்பர்கள் ஸ்பென்சர் ப்ளாசாவில் கே.எல் என்ற சேட்டிலைட் ரேடியோ நிறுவனத்திற்காக ஒரு இசை நிகழ்ச்சியை ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். 4 மணியிலிருந்து 6 மணி வரை நிகச்சி நடக்கும். ஆங்கிலப்பாடல்களை எங்கள் இசைக்குழு இசைத்து பாடுவார்கள். இசையை ரசிக்க தெரியுமே தவிர எனக்கு பாடவும் தெரியாது எந்த இசைக்கருவியையும் இசைக்கத் தெரியாது. ஆனால் என்னுடைய சுருள் முடியின் ஸ்டைலுக்காக என்னை தங்கள் குழுவில் இடம்பெறச் செய்தார்கள் நண்பர்கள். என் கையில் கிதாரை கொடுத்து ‘கீழே இருக்கும் ஸ்டிங்கை மட்டும் லேசாக இழுத்துக்கொண்டிரு’ என்று சொல்லி என்னை அமரவைத்துவிட்டார்கள். நானும் பெரிய கிதார் இசைக் கலைஞனைப் போல் நாணை மீட்டிக்கொண்டிருந்தேன். கிதாரில் நான் எழுப்பும் சத்தம் மற்ற இசைக்கருவிகளுக்கு நடுவே அமுங்கிப் போய்விடும். சொல்லப்போனால் சில சமயம் என்விரல்களால் கிதாரின் நாணைத் தொடாமலே வெறும் பாவனையோடு அசைத்துக் கொண்டிருந்தேன். அங்கு நான் இசைச் கலைஞன் இல்லை. காட்சி பொருளாகத்தான் இருந்தேன்.

எங்களை இசையை ஒரு நூறுபேராவது ரசித்துக்கொண்டிருப்பார்கள். அந்த சின்ன ஹால் கூட்டத்தால் நிரம்பி வழியும். கிதாரை வாசிக்கும் முழுபாவனையில் பார்வையாளர்களின் கண்களை நேரடியாகப் பார்ப்பேன். அப்படியான ஒரு பொழுதில் லாவண்யாவும் என்னைக் கூர்ந்து பார்த்ததை பார்த்துவிட்டேன். பின்பு எங்கள் இருவரின் கண்களும் அடிக்கடி சந்தித்துக்கொண்டன.

அன்று நிகழ்ச்சி முடிந்ததும் லாவண்யா என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டு ஒரு சின்ன நோட்டை நீட்டினாள். நானும் மிகப்பந்தாவோடு நோட்டை வாங்கி ஆட்டோகிராஃப் போட்டேன். அதை பார்த்த நண்பர்கள் ஒரே பேய்க்கூச்சல் போட்டு கலாட்டா செய்தார்கள். லாவண்யா அந்தக் கலாட்டைவை ரசித்தபடி காதைப்பொத்திக்கொண்டு என்னிடம் பேசினாள். நான் ஸ்டைலாக இருப்பதாகச் சொல்லி நான் கிதார் வாசிப்பது பொருத்தமாக இருக்கிறது என்றாள். கட்டுப்பெட்டியாக ஒரு காட்டன் சுடிதாரை அணிந்து வந்திருந்த அவள் என்னை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை. நண்பர்கள் மச்சான் ‘கன்னி மச்சம்டா’ என்று கூப்பாடு போட்டார்கள். அது சந்தோசமாக இருந்ததால் நானும் அந்தப் பெண்ணை ஒரு மூலையில் ஓரங்கட்டி பேச ஆரம்பித்தேன். அவள் ‘நீங்கள் எப்படி அவ்வளவு அழகா கிதார் வாசிகிறீங்க’ என்றதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மேலே எழும்பாத இசைக்கு ஒரு ரசிகை வேறு! அதுவும் என்னிடம் ‘கிதார் நல்லா வாசிக்கிறீங்க’ என்று சொன்ன முதல் ஆளு வேறு அதனால் அவளைத் தவிர்க்க முடியாமல் “எதாவது சாப்பிடலாமா” என்றேன். சரி என்று கொஞ்சம் வெட்கத்துடனே தலையாட்டினாள். பின்பு அவளே சொன்னாள் ‘லாஸ்ட் டூ மன்த்ஸா உங்கள பார்த்திட்டிருக்கேன். பேச ஆசையா இருக்கும் ஆனால் பயத்தில விட்டுடுவேன். இன்னைக்குத்தான் கொஞ்சம் தைரியமாகி உங்ககிட்ட பேசினேன்’ என்றாள். நான் சிரித்தபடி அவளுக்கும் எனக்குமாக கோக், பீட்ஸா வாங்கினேன். அன்று சனிக்கிழமையாக இருந்ததால் இளம் பெண்களும் ஆண்களுமாக ஸ்பென்சர் நிரம்பி வழிந்தது. ஒரு மூலையில் நின்றபடி சாப்பிட்டோம். அவளைப்பற்றி விசாரித்தேன் சொந்த ஊர் சேலம் என்றாள். இங்கே விடுதியில் தங்கி,பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாகச் சொன்னாள். அவள் குடும்பம் ஓரளவு வசதியான குடும்பமாம். அவளும் என்னைப்போல் நகரத்தின்பால் ஈர்ப்பு கொண்டுதான் இங்கே வந்திருக்கிறாள். ஆனால் தோழிகள் அவ்வளவாக இல்லை. அவள் நகரத்தின் எல்லா அடுக்குகளையும் திறந்து பார்க்கும் ஆர்வத்தோடு இருந்தாள். கொஞ்ச நேரம் அவளோடு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டோம். அவள் எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால் அப்படியே அவளை மறந்துவிட்டேன். ஆனால் அவள் எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாள். என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னாள். நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன் என்று பதில் அனுப்பினேன். அடுத்த சனிக்கிழமை ஸ்பென்சரில் பார்த்ததும் ஓடிவந்து பேசினாள். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன் உற்சாகமாக கைகுலுக்கிக் கொண்டாள். அவளுள் ஒரு புத்துணர்ச்சியும் எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆவலும் இருந்தது. நானும் அவளோடு நட்போடு பேச ஆரம்பித்தேன். அப்படியே நட்பு தொடர்ந்தது. மணிக்கணக்காக என்னோடு போனில் பேச ஆரபித்தாள். சில நேரம் செல்போனில் விடிய விடிய குறுஞ்செய்திகளை பறிமாறிக்கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தேன். அதை லாவண்யாவிடம் சொல்லவில்லை. நான் காதலிக்கும் பெண் அடக்கமான பெண். என்னோடவே அதிகம் வெளியே வரமாட்டாள். வாரத்திற்கு ஒரு நாள் ஒரு காபி ஷாப்பில் சந்திப்போம். பின் போனில் பேசிக்கொள்வோம். அதுவும் அதிகமான உரையாடல் கிடையாது. என் காதலி அவளைப்போலவே என்னையும் அடக்கமான பையனாக நினைத்துக்கொண்டிருந்தாள். என்னுடைய பார்ட்டி கலாச்சாரமெல்லாம் அவளுக்கு தெரியாது. என் காதலியைவிட லாவண்யாவிடம்தான் அதிகமாக பேசினேன். சந்தித்தேன். ‘எப்படியெல்லாம் பேசுறே’ என்று வியந்து போய் லாவண்யா என்னைப்பார்ப்பாள். அவளை வீழ்த்தும்விதமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒரு முறை அவளிடம் ‘லேடிஸ் சைக்காலஜி சிம்பிள்’ என்றேன். ‘எப்படி?’ என்றாள் வியப்பாக. ‘உனக்கு பிடிச்ச பாட்டு, படம் சொல்லட்டுமா’ ‘சொல்லு பார்ப்போம்’ ‘உனக்கு மெளனராகம் பிடிக்கும். அதுல வர்ற கார்த்திக் கேரக்டர் ரொம்ப பிடிக்குமே’(90 சதவீதம் பெண்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று தெரியாத அப்பாவி அவள்)
‘அய்யோ எப்படிடா’ என்று துள்ளிக்குதித்தாள். ‘மின்சாரக்கனவு படத்தில வர்ற வெண்ணிலவே பாட்டு பிடிக்குமே’ ஆமாம் என்று கண்களை விரித்து ‘சிநேகிதனே’ பாட்டை விட்டுட்டியே என்றாள். ‘அடுத்து வருவேன்ல’ என்று அந்த பாட்டு ‘the most erotic song’ என்றேன். ‘அது ரொமாண்டிக் சாங்க்தானே ஏன் எரோடிக்குனு சொல்ற’ என்றாள். ‘நைட் போய் மறுபடியும் கேட்டுட்டுச் சொல்லு அது எரோடிக்னு புரியும்’ என்றேன். ‘ஏய் இப்பவே சொல்லுடா என்றவள் என் கண்களைப்’ பார்த்தாள். நான் குறும்பாக சிரித்ததும் ‘சரி நானே கேட்டுக்கிறேன்’ என்றாள். அன்றிரவு “மலர்களில் மலர்வாய்” அந்த வரிதானே என்று குறுஞ்செய்தி அனுப்பி, உண்மையாவே எரோட்டிக்தான் என்றாள்.

கல்லூரியை முடித்துவிட்டு வேலை தேடத் தொடங்கினேன். அப்போதும் அவள் என்னோடு சுற்றிக்கொண்டிருந்தாள். ஒரு நாள் அவளுக்கு ஆண்நண்பர்கள் யாரும் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டாள். ‘இப்படி இருந்தா எப்படி கிடைப்பாங்க ஃபாய்ஃபிரண்ட்ஸ். ‘ஸ்டைலா மாறனும்’ என்றேன். அன்று நானும் உன்னோடு சனிக்கிழமை பார்ட்டிக்கு வாறேன் என்றாள். ‘இந்த சுடிதாரோடா?’ என்று சிரித்துவிட்டேன்.அவள் முகம் சுருங்கியது. ‘என்னைப்பார்த்தா கட்டுப்பெட்டி மாதிரியா தெரியுது’ என்றாள். ஆமாம் என்றேன். ‘என்ன செய்ய’ என்றாள் அப்பாவியாக. ‘முதல்ல நீ ட்ரெஸ் ஸ்டைலே மாத்து.மாடர்ன் டிரெஸ் போடு’ என்றேன். ‘நீயே எடுத்துக்குடுக்கிறீயா இதுக்கு முன்னாடியே நான் அப்படியெல்லாம் டிரெஸ் வாங்கினதே இல்ல’ என்றாள். அப்போதே கடைக்குச் சென்று அவளுக்கான ஒரு முக்கால் பேண்ட்டும் டி சர்ட்டும் வாங்கினோம். அதை அங்கேயே அணிந்து கொண்டு வந்தாள். உடை மாறியதும் ஆளே மாறிப்போனாள். ‘இப்ப என்னை கூட்டிட்டு போவியா’ என்றாள் சிரித்தபடி.

ஹோட்டலின் மதுபான விடுதியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். என்னுடைய நண்பர்களும் தோழிகளும் அங்கே உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். இவள் அந்த இடத்திற்கு அந்நியமானவளைப் போலவே அமர்ந்திருந்தாள் அவளின் கைகள் மட்டும் இடை தெறிந்த டீ சர்ட்டை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது. குடிக்கிறீயா என்றேன் தயக்கத்தோடு அவள் லேசான சிரிப்போடு ஒன்னும் ஆகாதா? என்றாள். இல்ல ‘கொஞ்சமா குடி’ என்றேன். ஆனால் அதிகம் வாசனை இல்லாத கசக்காத ட்ரிங் கிடைக்குமா என்றாள். ஆப்பிள் ரெட்வைன் அவளுக்கு ஆர்டர் செய்தேன். ஒன்னும் ஆகாதே என்றபடி முதல் சிப்பை விழுங்கினாள். அவள் முதல் சிப்பை விழுங்கிய விதம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. தயக்கம் சந்தோசம் சுதந்திரம் எல்லாமே அவள் முகத்தில் தெரிந்தது. கனவு உலகத்தை எட்டிப்பார்க்கும் குழந்தையாக முதல் சிப்பை விழுங்கினாள். அவள் அந்த கசப்பை எதிர்பார்த்திருக்கமாட்டாள் போல பார்ட்டி முடியும் வரையில் ஒரு பெக்கை கையில் வைத்து குடித்துக்கொண்டிருந்தாள்.

டிஸ்கொதேயில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துக் ஆடிக்கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘போய் ஆடுறியா’ என்றேன். ‘என்னது? முன் பின் தெரியாதவங்ககூட இப்படி வெட்கமில்லாமல் கட்டிப்பிடிச்சு ஆடுறதா சீ’ என்றாள். ‘சில்வியா ப்ளாத் படிச்சிருக்கியா நீ’ என்றேன் ‘யார் அவங்க’ என்றாள் அப்பாவியாக ‘அவங்க ஒரு கவிஞர் அவங்களைப்பத்தி சொல்லம்னா அரை நாள் வேணும் ஆனால் அவங்க சொன்ன ஒரு விசயத்தை சொல்றேன் கேட்டுக்க, ‘’Dance is the nearest happiness to the intercourse’’ னு சொல்லியிருக்காங்க தெரியுமா? சோ யூ என்ஜாய் டான்ஸ்’ என்றேன். ‘யார் வேணுன்னாலும் என்ன வேணுன்னாலும் சொல்லிட்டு போகட்டும் நான் ஆடலப்பா’ என்று அமர்ந்திருந்தாள்.

நான் அன்று அவளிடம் மெஸ்மரிசம் பண்ணுவது மாதிரிதான் நிறைய விசயங்களைப் பேசினேன். ‘சந்தோசத்துக்காக நீ செய்யுற ஒவ்வொரு செயலும் மூளைக்குத்தான் போகும். ஆனால் இசையோடு நீ இணையும் போது சந்தோசம் இதயத்துக்கு போகும். தொலைந்து போவதுதான் புனிதம். அது இசையாகவோ, போதையாகவோ,காமமாகவோ இருக்கலாம்’. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘எனக்கு சுத்தி நடக்கிறது எதுவும் தெரியல நீமட்டும்தான் தெரியுற. எவ்வளவு அறிவா அழகா பேசுற நாள் முழுக்க உன்கூடவே இருக்கனும் அதுதான் என் ஆசை’ என்றாள்.


அவளை பத்திரமாக விடுதியில் விட்டுவிட்டு நான் கிளம்பினேன். நான் அவள்மேல் அதிக அன்பும் அக்கறையும் வைத்திருப்பதாக மெசேஜ் அனுப்பினாள். ‘பாவம்டா அந்தப் பொண்ணு. நான் வேற பொண்ணை காதலிக்கிறேனு உண்மையை சொல்லுடா’ என்று நண்பர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள். பதிலுக்கு நான் அவர்களிடம் ‘போங்கடா நான் இல்லன்னா வேற எவனாவது அவளை கரெக்ட் பண்ணுவான். அது நானா இருந்துட்டு போறேன். போங்கடா நானென்னா அவளை ரேப் பண்ணவா பேறேன். ஜாலியா கொஞ்சநாள் அவளோட சுத்துவேன் அவ்வளவுதான்’ என்று அவர்களின் வாயை அடைத்தேன்.

லாவண்யா என்னோடு நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளைப்போல நான் அவளை விரும்பவில்லை. உண்மையில் அவள் மேல் மிகப்பெரிதான அக்கறையும் இல்லை. எல்லோரையும் போல அவளிடம் நட்பாக பழகினேன். பின்பு வந்த நாள்களில் அவளை நான் சுடிதரோடு பார்க்கவில்லை. அவள் ஸ்டைலும் உடையும் மாறிப்போனது ஆனால் உள்ளுக்குள் அன்பான பெண்ணாகவே இருந்தாள்.

நண்பன் ஒருவனின் பிறந்தநாளைக் கொண்டாட ஈ.ஸி.ஆர் ரோட்டில் பார்ம் ஹவுஸ் ஒன்றில் சீக்ரெட் பார்ட்டி ஏற்பாடானது அதைப்பற்றி அவளிடம் நான் சொல்லவில்லை. நண்பன் அவளை அழைத்திருக்கிறான். அவள் என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட்டாள். ‘ஹோட்டல் மாதிரி இல்லை. நடுராத்திரி ஆயிடும் அங்கேயே தங்கனும் அதனாலே வேணாம்னு நினைத்தேன்’ என்றேன். ‘வேற கேர்ல்ஸ் யாரும் வரமாட்டாங்களா’ என்றாள். ‘வருவாங்க’ என்றேன் ‘அப்புறம் ஏன் என்னை மட்டும் வேணாங்கிற இன்னும் நான் உனக்கு கட்டுப்பெட்டியாவே தெரியுறேனா’ என்றாள். ‘அப்படியெல்லாம் நினைக்கல வா’ என்றேன்.

முன்பு மாதிரி இல்லை அவள் நிறைய குடிக்கப் பழகியிருந்தாள். போதை ஏறியதும் ஆளாளுக்கு அறையில் போய் ஒதுங்கிக்கொண்டார்கள். நானும் அவளும் ஒரு அறைக்குச் சென்றோம். எனக்கும் அன்று போதையில் கொஞ்சம் தலையை வலிப்பதுபோல் இருந்தது. கட்டிலில் அப்படியே விழுந்தேன். அவள் என்னருகில் வந்து படுத்தாள். பின்பு என் காதருகில் வந்து ‘டேக் மீ டா’ என்றாள். அவளை அப்படியே தலையோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். பேசாமல் படுத்திருந்தேன். திரும்பவும் ‘டேக் மீ டா’ என்றாள். ‘இங்க பாரு லாவண்யா இப்ப நீ நிறைய குடிச்சிருக்கே நானும் நிறைய குடிச்சிருக்கேன். எனக்கும் செக்ஸ் வச்சுகலான்னுதான் தோணுது. ஆனாலும் மனசுக்கு சரியாபடலை. போதை தெளிஞ்சதுக்கு அப்புறமும் இது தப்பில்லனு உனக்கு தோனுச்சுனா அதுக்கப்புறம் வச்சுக்கலாம்.இப்ப தூங்கு’ என்றேன். ‘சரி’ என்று அவள் என்னருகில் படுத்துத் தூங்கினாள். காலையில் எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தோம். அவளிடம் ‘இப்ப உனக்கு செக்ஸ் வச்சுகிட்டா தப்பில்லனு தோணுதா’ என்றேன். ‘இல்ல’ என்றாள். ‘இனிமேல் குடிச்சிட்டு இந்த மாதிரி யோசிக்காதே’ என்று சொன்னேன். அவள் மிக அன்போடு என்னைப்பார்த்தாள். அந்த பார்வையை ஒன்றிரண்டு கணங்களுக்கு மேல் சந்திக்காமல் பார்வையை விலக்கிக்கொண்டு அவளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.

ஒரு நாள் முக்கியமான விசயம் பேச வேண்டுமென்று நேரில் வரச்சொல்லி என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். நான் அப்படியெல்லாம் அவளிடம் பழகவில்லை என்றேன். அப்போதுதான் அவளிடம் ஏற்கனவே நான் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன். ஆனால் அவள் அதை நம்பவில்லை. ‘பொய் சொல்லாதடா என்னைப் பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லு எனக்குத் தெரியும் நீ யாரையும் காதலிக்கல. பார்ட்டிக்கு வராம டிரிங் பண்ணாம, செக்ஸ் வச்சுக்கலாம்னு உன்னைக் கூப்பிடாம இருந்திருந்தா என்னை லவ் பண்ணியிருப்பியிலே. இப்ப நான் உனக்கு கேவலமான பொண்ணாத் தெரியுறேன்ல. நான் உன்னை பார்த்த நாளிலிருந்தே உன் மேல எனக்கு க்ரஷ்தாண்டா. நான் எப்பவும் உன்னை லவ் பண்றதா நெனைச்சுட்டுதான் உன்கூட வந்தேன்’ என்றாள். எனக்கு சங்கடமாக இருந்தது. எனக்காகத்தான் எல்லாவற்றையும் செய்ததைப்போல் அவள் சொன்னாள். ஸ்டைலாக இல்லாட்டி அவளை வேண்டாமென்று சொல்லிவிடுவேனோ என்றுதான் அவள் அப்படிமாறியதாகச் சொன்னாள். அதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ‘ஐ லைக் யூ. பட் ஐ லவ் சம் அதர் கேர்ள்’ என்றேன்.

அவள் நம்பாமல் மறுமடியும் மறுபடியும் காதலிப்பதாகச் சொன்னாள். நான் அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன். விடாமல் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள். பதிலும் அனுப்பவில்லை போனையும் எடுக்கவில்லை. அவளைச் சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொண்டேன். ஒரு நிலைக்கு மேல் போன் நம்பரையே மாற்றிவிட்டேன். அவள் என் நண்பர்களிடம் என் போன் நம்பரைக் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறாள். என் நம்பரை அவளிடம் கொடுக்க கூடாது என்று எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தேன். ‘ஆரம்பத்திலே சொன்னோம்லடா பாவம்டா அந்தப்பொண்ணு’ என்று நண்பர்கள் என்னைத்திட்டினார்கள். பின்பு அப்படியே அவள் தொடர்பு விட்டுப்போனது.

ஒரு வருடத்திற்கு பிறகு பாண்டிச்சேரி பார்ட்டியில் சந்தித்தேன் அப்போது அவளைச்சுற்றி வேறொரு குரூப் இருந்தது. தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னாள். என் அறைக்கு அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ராத்திரி அங்கே பார்ட்டி நடப்பதாகவும் காலையில் சந்திக்கலாம என்று சொல்லிவிட்டுப் போனாள். ராத்திரி ஒரு மணி இருக்கும் பலமான கதவு தட்டல். கதவை திறந்தால் லாவண்யா அலங்கோலமாக நின்று கொண்டிருக்கிறாள். வேகமாக அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். அவள் முகமெல்லாம் வீங்கித் தடித்திருந்தது, மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பார்ட்டி முடிந்ததும் கூட வந்து ஒருத்தன் அவளை செக்ஸுக்கு அழைத்திருக்கிறான். அவள் மறுத்ததும் அடித்து பலாத்காரம் செய்ய ஓடி வந்திருக்கிறாள். பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய பனியன் எல்லாம் சாப்பாடெல்லாம் கொட்டி அழுக்காக இருந்தது. குடிபோதை, உடல் காயம் பார்க்க சகிக்க முடியாத கோலத்தில் இருந்தாள். எனக்கு முதல் முறையாக அந்த மாதிரியான வாழ்க்கைமுறை பிடிக்காமல் போனது. அருவருப்பாக இருந்தது. நானும் அவள் இப்படி ஆக ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறேன். அவளை கட்டிலில் படுக்க வைத்தேன். என் நண்பர்கள் கீழே படுத்துக்கொண்டார்கள்.

ஹோட்டல் வராண்டாவில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவன்தான் என்றாள் லாவண்யா. நான் வெளியே வந்து பார்த்தேன். அவன் ‘ஹேய் பிட்ச். ஐ வில் கேட்ச் யூ’ என்று சலம்பியபடி தேடிக்கொண்டிருந்தான். பிரச்னை வேண்டாமென்று நான் அறைக்குள் வந்துவிட்டேன். நான் தூங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று அதிகாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்பி வா கிளம்பலாம் என்றேன். பகலில் அவளை வெளியே அழைத்து போக முடியாதபடி அவள் காயம்பட்டிருந்தாள். போலீஸுக்கும் போக முடியாத சூழ்நிலை. அவள் முகத்தில் காய்ந்து போயிருந்த ரத்தக் கறையை ஈரத்துணியால் துடைத்துவிட்டேன்.அப்போதும் அவள் அரைப் போதையில் இருந்தாள். யாருக்கும் தெரியாமல் அவளை அங்கிருந்து காரில் அழைத்துக்கொண்டு என் நண்பர்களோடு கிளம்பினேன். நான் என் நண்பன் அவள் மூவரும் பின்னால் அமர்ந்திருந்தோம். ஒரு நண்பன் காரை ஓட்டி வந்தான். இரு நண்பர்கள் முன் சீட்டில் ஒருவர் மடியில் ஒருவர் உர்கார்ந்துவந்தார்கள். அவள் என் தோளில் சாய்ந்தபடி வந்தாள். அவளால் உட்காரக்கூட முடியவில்லை. சிறிது நேரத்தில் அவள் தோழியிடமிருந்து போன். போதை தெளிந்து இப்போதுதான் அவளைத் தேடி இருக்கிறார்கள். அழுதபடி ராத்திரி நடந்த விசயத்தை சொல்லி “குடிச்சா எல்லாத்தையும் செஞ்சிடுவேனு அவன் நெனைச்சானாடி” என்றாள். பின்பு ஃபோனை அணைத்துவிட்டு என்னைப்பார்த்தாள். ‘ஏன் லாவண்யா இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸோட வந்தே. இந்த மாதிரி தப்பெல்லாம் இனிமேல் பண்ணாதே’ என்றேன். அவள் என்னை கூர்ந்து பார்த்தபடி ‘என் வாழ்க்கையிலேயே செஞ்ச ஒரே தப்பு உன்னை பார்த்ததுதாண்டா’ என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள். நான் அமைதியாக அவள் சொன்னது பெரிதாக பாதிக்கவில்லை என்பதைப்போல் இருந்தேன். அவளை ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துபோய் டாக்டரிடம் காட்டிவிட்டு அப்படியே விடுதிக்கு கொண்டுபோய் விட்டுவிட்டேன். அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிய அவள் செல்போனுக்கு அழைத்தால் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பலமுறை தொடர்புகொண்டும் ஃபோன் அணைக்கப்பட்டே இருந்தது. விடுதிக்குச் சென்று விசாரித்தால் அவள் ஊருக்கு சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அவளை தொடர்பு கொள்ள வழியில்லாததால் அப்படியே விட்டுவிட்டேன். இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இப்போது வரை அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் அப்படி ஆவதற்கு நான்தான் காரணமோ என்ற குற்ற உணர்வு மட்டும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அவளும் அப்படி நினைத்துதான் என் தொடர்பிலிருந்து விலகிப்போயிருக்கலாம். எங்களுக்கென்று பொதுவான நண்பர்கள் யாரும் இல்லாததால் அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறியமுடியவில்லை. அவள் ஏதாவது ஒரு வெளிநாட்டில் இருப்பாள் என்றே தோன்றியது. உயர்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாள். ஆனால் இன்னொரு பக்கம் அவள் வாழ்க்கை தறிகெட்டு சீரழிந்து போயிருக்குமோ? பார்ட்டி, நண்பர்கள் என்று விடுபடமுடியாமல் போயிருப்பாளோ ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற பயம். என்னுடைய ஏளனம்தான் அவளை இப்படியெல்லாம் செய்ய வைத்ததோ ஏதோதோ நினைவு அவள் பாலியல்தொழிலாளியாகக்கூட மாறியிருப்பாளோ என்று நினைத்தேன். அப்படி நினைக்கவே பயங்கரமாக இருந்தது. குற்ற உணர்ச்சி கனவில் கருமை நிறத்தில் வந்து கொன்றது. கனவில் பாசிபடிந்த கிணற்றில் வழுக்கி விழுந்து செத்தேன், மலை உச்சியிலிருந்து குதித்தேன், பாலைவனத்தில் தண்ணீரில்லாமல் காய்ந்து வெப்பத்தில் உயிர் பிரிந்தது. எல்லாக் கனவிலும் நான் செத்துக்கொண்டே இருந்தேன். ஒன்றும் இல்லை அவள் என்னோடு பேசக்கூட வேண்டாம். நல்லா இருக்கிறாள் என்று தெரிந்தால்கூடபோதும்....அதுவரை என்னால் குற்ற உணர்ச்சியிலிருந்து மீளமுடியாதுதான்.

(ஜனவரி 2011 உயிரெழுத்து இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதை)