சனி, 11 ஜூலை, 2009


கரு நிழலும்
இள வெயிலும் நிரம்பிய
சிறுமலையின் அடிவாரத்தில்
காத்திருக்கிறேன் .
சமவெளிஎங்கும் நிரம்புகிறது
உன் வாசனை .
துகள்படிந்த ஒளிக்கீற்றைப் போல்
குழந்தைமையும்
கடவுளின் புன்னகையுமாய்
அருகில் வராமல்
நாணல்களின் பின்னால் நின்று
ஒளிர்ந்து சிரிக்கிறாய் .

புகைப்படம் ;சந்திரா

வியாழன், 9 ஜூலை, 2009

நெற்றிக்கண் திறப்பினனுக்கு என் பதில் கருத்து

உங்கள் கருத்துரையில் இஸ்லாம் ஒரு இனம் என நான் குறிப்பிட்டிருந்தது தவறு எனவும்
.அது இனம் சார்ந்த என் பார்வையின் தெளிவின்மையை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டு உள்ளிர்கள் .இஸ்லாம் ஒரு மதம் .மதத்திற்கும் .இனத்திற்க்குமான வேறுபாடு தெரியவில்லை என்கிறீர்கள் .இஸ்லாம் ஒரு மதமல்ல அது ஒரு மார்க்கம் என்கிற அளவிற்கான தெளிவோடுதான் இஸ்லாமை ஒரு இனமாக குறிப்பிட்டேன் .
மனரீதியாக அவர்கள் தங்களை ஒரு தனி இனமாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை மனநிலையின் பயம் அவர்களை இஸ்லாம் அல்லாத நாடுகளில் ஒரு இனமாக குழுவாக செயல்பட வைத்திருக்கிறது .வாழ்விட அடையாளங்களைவிட ,மொழியைவிட ,மார்க்க அடையாளம் பெரிது .அதன் வழியில் பயணப்படுகிறார்கள் .அது அவர்கள் சூழல்,அதையும் குற்றப்படுத்த முடியாது என்கிற தெளிவும் என் கட்டுரையில் இருக்கிறது .

புத்தம் ,இந்து ,ஜைனம்,கிருத்துவம் ,இஸ்லாம் ,எதுவாக இருந்தாலும் பிறப்பால் தமிழன் என்பதுதான் இனம் என்று சொல்கிறீர்கள் .என் கருத்தும் அதுதான் .இஸ்லாமியர்கள் தமிழர்களோடு இணைந்து போராடி இருக்க வேண்டும் .இனி வரும் காலங்களிலாவது அவர்கள் தமிழ் இன உணர்வு கொள்ள வேண்டும் இது தான் என் கருத்தும். இதில் பிளவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. தெளிவுபடுத்தும் எண்ணமும் ,தமிழ் இனத்தில் நீங்களும் ஓர் அங்கம் என வலியுறுத்தும் நோக்கமும் மட்டுமே உள்ளது .இஸ்லாமியர்கள் மட்டுமே பிற மதத்தினரை உறவு சொல்லி அழைக்கும் பெரும் போக்கான மனநிலை கொண்டவர்கள் என்பதை அழுந்தச் சொன்ன
காரணமே ..அவர்கள் உணர்வு நிலையில் உயர்ந்தவர்கள் ,அன்பும் மனித மாண்பும் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கே உணர்த்தும் எண்ணத்தில்தான்.

விடுதலைப் போரில் எதிரிகளை அழிப்பதைவிட , துரோகங்கள் ஒடுக்கப்பட வேண்டும் .துரோகிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது யுத்த ஒழுங்கு .எல்லா போருக்கும் உரிய போர் மரபு அது என்பதுதான் என் வலியவாதம். உலகமே மனித நேயத்தை தின்றுவிட்டு ஒரு விலங்கு வாழ்க்கை வாழத் துவங்கிவிட்ட பிறகு ,ஐ .நா .சபை கருணையின் கதவுகளை சாத்திய பிறகு ,வல்லரசுகள் வாய்மூடி மௌனமான பிறகும்..தங்கள் ஆளுமை ,வலிமை ,வாழ் நிலம் எல்லாவற்றையும் இழந்த பின்னும் புலிகள் தங்கள் மானுட நேயத்தை உறுதியாக கடைபிடித்தார்கள் .போர் மரபுகளை காத்தார்கள் .அப்பாவிகள் புலிகளால் கொல்லப்படவில்லை.ஒருவேளை தமிழர்களை அழித்தால் பதிலுக்கு சிங்களர்களை அழிப்போம் என புலிகள் முடிவு செய்திருந்தால் இலங்கை எப்போதோ தமிழ் ஈழ நாடாகி இருக்கும் .அவர்கள் தங்களின் சுய நேர்மையாலும் ,தன்னின துரோகத்தாலும்,தற்காலிகமாக தோற்றவர்கள் .இலங்கை பொருளாதாரத்தை வீழ்த்துவதும் ,சிங்கள இனத்தை அழிப்பதும் சாத்தியமான காலகட்டம் புலிகளுக்கு இருந்தது .புலிகள் ஒருபோதும் அதை செய்ய முன்வரவில்லை.சுய வெற்றிக்காக மரபுகளை உடைத்தல் தவறு என்ற தெளிவு அவர்களிடத்தில் இருந்தது .தனி மனித ஒழுக்கம் கட்டுப்பாடு ,போர் விதி முறை காத்தல் என வாழ்கின்ற தலைமை அவர்களுக்கு இருக்கிறது .நல்ல தலைமையின் வழி காட்டுதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு அது தவறாகப்படுகிறது,உங்களுக்கும். ஜெயலலிதா அப்பாவிகள் கொல்லப்படுதல் போரில் சாதாரண விஷயம் எனச் சொன்னதையும் ..நான் துரோகங்கள் அழிக்கப்படும் என் சொன்னதையும் ஒப்பிட்டு சொல்கிறீர்கள். தெளிவின்மை யாரிடம் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை என் கட்டுரையை வாசித்துவிட்டு சொல்லுங்கள் .

உங்கள் கருத்துரையின் மூலம் இரண்டு தெளிவுகள் கிடைக்கிறது .ஓன்று நீங்கள் மேலோட்டமாக வாசித்து இருக்கிறீர்கள் .இரண்டு மொழிகளுக்குள் சிக்கி இருக்கிறீர்கள் .உங்கள் பார்வையில் என் கருத்து புலப்படவில்லை. மொழிச் செறிவை மொழி அழகை மட்டுமே பார்த்துவிட்டு கருத்து அடர்த்தியாக இல்லை என்கிறீர்கள் .
எனக்கு வசப்பட்ட வார்த்தைகளைக் கொண்டுதான் என் கருத்துகளை கட்டமைக்க முடியும். என் கண்ணீரை என் கண்கள் வழியாகத்தான் அழுது தீர்க்க முடியும். மொழி என் கண்கள் மீண்டும் என் கட்டுரையை அலங்கரிக்கப்படாத வார்த்தைகளாய் வாசித்து பாருங்கள். அதில் உணர்வுகளும் ,உண்மையும் காணக் கிடைக்கும் .கருத்துரைக்கு நன்றி .

ஞாயிறு, 5 ஜூலை, 2009

புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன.


ஜுன் 26 ல் நுங்கம்பாக்கம் ஐ கப் ஹவுஸில் நடைபெற்ற பன்முக வாசிப்பில் ஈழக் கவிதைகள் நிகழ்வில் கவிஞர் மஜித்தின் ‘புலிபாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ கவிதை நூல் குறித்து நான் வாசித்த திறனாய்வு கட்டுரை.
புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன.
ஒவ்வொரு மனிதனின் மன ஆழங்களில் ஒளிந்திருக்கும் நினைவுகளைப் பொறுத்து மழை வாழ்வியல் துன்பங்களையும், தீராப் பெருங்காதல்களையும், துக்கத்தின் சிதைவுகளையும் ஞாபகப்படுத்தும். மஜீத்தின் புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தனதொகுப்பில் மழை, குளிர் இரண்டுமே துயர அழகியலோடு சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அழகியல் கோடையில் வீரியம் கொண்டு எழுகிறது.
அவருடைய உலகில் சூரியன் வெக்கை கொண்டு அலையும் நாட்களில் பெய்யும் மழையால் கோடையின் தனிமையை நிதானப்படுத்த முடியவில்லை. மாறாக கோடையின் ஒளிபட்டு உலர்ந்திருக்கும் ரத்தம் மழையில் கரைந்தோடி பிரபஞ்சத்தை நனைக்கிறது. துக்கத்தை நிரப்புகிறது என்கிறார்.
இரட்டை ஆயுதங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூக வலியின் ரத்தப்பதிவு.. இதை நினைவில் கொண்டு வாசிப்பைத் துவங்குங்கள் என்று சித்திரமாக்கப்பட்ட அவருடைய கோடையின் இரவுகளுக்குள் நுழையும் திறவுகோலைத் தருகிறார். அந்த திறவுகோல் வெறும் கவிதைகளுக்கான திறவுகோல் அல்ல.. ஈழ தமிழ் இன, இஸ்லாமிய இன, சிங்கள இன அரசியல் வாழ்விற்கான திறவுகோல்.
இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் சிக்கல் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என்பதுதான். க்ஷீமீறீவீரீவீஷீஸீ வீபீமீஸீtஹ் ஷீக்ஷீ க்ஷீமீரீவீஸீணீறீ வீபீமீஸீtஹ் என்பதில் அவர்களுக்கு குழப்பம் நேர்கிறது. சிறுபான்மையினருக்கே உரித்தான பயம். தோழமை சந்தேகங்கள் அவர்களுக்குள் இருக்கிறது. இந்த மனநிலைதான் எப்போதும் அவர்களை இருபுற கூர்மை ஆயுதங்களுக்கிடையே சிக்கச் செய்கிறது. இந்தியாவிலும் கூட இந்த சூழ்நிலைச் சிக்கல் காலகாலமாக இருந்து வருகிறது. எல்லா சாதிகளையும் உறவு சொல்லி அழைக்கும் ஒரு பெரும் போக்கு இஸ்லாமியர்களிடம் உண்டு. காலம் அவற்றைத் தின்று எல்லா மண்ணிலும் இஸ்லாம் இனத்தின் மீது ஒரு தவறான மாயையை ஏற்படுத்திவிட்டது. இன உணர்வு, மார்க்க உணர்வு எதை முன்னிலைப்படுத்துவதென்கிற சிக்கல் எல்லா நிலைகளிலும் அவர்களிடம் இருந்தே வருகிறது.
சித்திரக் காட்சியாக விரியும் மஜீத்தின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வலியை பிரதிபலிக்கிறது. அந்த வலிகளுக்குப்பின் பெருங்கனலாய் எழுந்து நிற்கிறது வலிகளுக்கான காரணிகள்.
புலிகளின் தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்டத்தை தமிழினப் பேரினவாதமாக்கி அதை சிங்களப் பேரினவாதத்துடன் ஒப்பீடு செய்து இரண்டையும் சம தராசில் நிறுத்துகிறார் மஜீத்..அவரது கவிதையில்
எனது சகோதரனை புலி கொன்றதுஎனது நண்பனைசிங்கம் குதறியதுபுலியும் சிங்கமும்எனது பெண்களை கைகோர்த்தபடி கொன்றன.என்கிறார்.
தமிழர்களாலும் சிங்களர்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டு ரசிக்கப்பட்ட முஸ்லீம்களுடைய ரத்தத்தைப்பற்றி பேசுகிற சித்திரம் இது, என்பதை வாசிக்கும் போது நினைவில் கொள்ளுங்கள் என்று மஜீத் திறவுகோல் ஒன்றை கொடுக்கிறார். பிறகு மேற்சொன்ன கவிதையில் சிங்கள இனவாதத்தை, புலிகளை நேரடியாக குற்றம் சுமத்திய பிறகு இஸ்லாமியர்களின் உண்மையான நிலைப்பாட்டை மஜீத் வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும்.
இரு இனங்களின் மோதலுக்கு இடையே நீங்கள் நடுநிலையில் பாதிக்கப்பட்டீர்களா? சார்பு நிலையில் பாதிக்கப்பட்டீர்களா? இரு ஆயுதங்களும் ஏன் உங்களை நோக்கி நீண்டன. நீங்கள் ஏன் அப்புறப்படுத்தப்பட்டீர்கள்? நடுநிலைதான் உங்கள் நிலைப்பாடு எனில் தாய்மொழி இன உணர்வுக்கு என்ன செய்தீர்கள். சார்புநிலை நிலைப்பாடெனில் உங்களை அவர்கள் ஏன் எதிரிகளாக பாவித்தார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது துவக்கத்தில் மஜீத் நமக்களித்த திறவுகோல்.
உலகில் எந்த விடுதலை போராட்டமும் குற்றமற்று நிகழ்ந்ததில்லை. யுத்த தந்திரங்களில் குற்றப் பெருக்கு தவிர்க்க இயலாது எனினும் நிலம் அறுத்து, வேர்பிடுங்கி விரட்டப்படுதல் யார் நிகத்தியிருந்தாலும் தவறு. இன விடுதலைக்கான போராட்டத்தில் எல்லாத் துரோகங்களும் அழிக்கப்படும். இது யுத்த ஒழுங்கு. யுத்த துரோகத்தால் ஏற்பட்ட விடுதலைக்கான பின்னடைவு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வழிந்த வரலாறு புலிகளுக்குள்ளும் ஒரு கோடை கால ரத்தச் சித்திரமாக இருக்கும். புலிபாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்த சித்திரத்தைப் போன்று, புலிகளும் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டு ரத்தம் சிந்திய கோடைச் சித்திரத்தை எழுதக்கூடும்..
மஜீத் கவிதைகளுக்குள் இருக்கும் அரசியலை மீறி.. காட்சியை படிமமாக்கும் கவிதை யுத்தியிலிருந்து விலகி சித்திரமாக்கியிருக்கும் மொழி ஆளுமை புதிய வாசிப்பு தளத்தை அகன்ற வெளியில் திறந்து வைக்கிறது. துயரங்களையும், வலிகளையும், வேரறுந்த வாழ்க்கையையும் நான்கு கோடைகளாக பிரித்து வலிமிகுந்த சித்திர எழுத்துகளாக மாற்றுகிறார். கோடை என்கிற குறீயீடு துயரங்களுக்கான அழகியல் குறியீடாகிறது. ஒவ்வொரு கவிதைகளும் இரவில் ஒளிரும் சித்திரமாய் விரிகிறது. இந்த வெளிக் கட்டமைப்பு கவிதைக்கான புது அழகியலைத் தருகிறது.
தனித்த இரவுகளில் ஒரு ஒற்றைப்புலம்பல், சின்ன விசும்பல், துளிக்கண்ணீர் விஸ்பரூபமாக வெளிப்படுகிறது. இரவு என்கிற படிமத்தை கையாண்டு அவர் தம் இனத்தின் வலிகளை மனதின் ஆழத்தில் நேரடியாகப் பாய்ச்சுகிறார். அழகியலாகச் சொல்லப்படும் மழையும் குளிரும் இரவின் சித்திரத்திற்குள் அடைக்கப்பட்டு, கோடையின் வெம்மைக்குள் நிறமிழக்கிறது. மழை அறுவறுப்பைத் தூண்டுகிறது. துன்பங்களையும் காயங்களையும் பரந்துபட்ட வெளியாக வார்க்கும் சித்திரத்தை நம் மன வெளியெங்கும் உருவாக்குகிறார்.
முதலாம் கோடையில் பிரபஞ்சம் முழுதும் ரத்தம். அதனால் கோடை சிவப்பாகிறது. காற்று வெளியெங்கும் கறுத்த ரத்தத் துளிகள். நீருக்கு பதிலாக ரத்தம் பசிக்கு உணவாகிறது. மரங்கள், பனி இரவுகள், நதிகள் இப்படி அழகிய தன்மை அனைத்திலும், இலக்கியங்களிலும் ரத்தம் கவர்ச்சியையும் கொடூரத்தையும் விரித்துப்போடுவதாகச் சொல்கிறார். வரலாறு முதல் பெண்களின் கன்னித் தன்மையை சோதிக்கும் கட்டில் வரை ரத்தம் அதன் வாசனையை பரப்பியபடி அதிர்ச்சியளித்தபடியே இருக்கிறது.
இனவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் வலியை முதல் கோடையின் சித்திரத்தில் ரத்தத்தால் வரைகிறார். இரவு 01 ல் கனவுகளை சிதைத்தபடி தெருக்களில் நடமாடும் புலிகளைப் பற்றிய அச்சத்தை சொல்கிறார்.
இரவு 02 "ல் மஜீத் குறிப்பிட்டிருக்கும் கவிதையில்
எனது வெளியை பங்கு போட்டுசிங்கங்களும் புலிகளும் பகிர்ந்து கொண்டனஇரண்டின் வால்களையும் முடிந்துவிட்ட எவனோஎனது இடத்தின் மீது நிரந்தரமானகாயத்தை ஆரம்பித்து வைத்தான் என்கிறார்.
சிங்கத்தின் வாலும் புலியின் வாலும் முடிந்துவிடப்படவில்லை. தனது வெளியில் அமைதியாக வாழ்ந்த சிறுபான்மை புலிகளை சிங்கங்கள் தன் பெரும் கூட்டத்தால் ரத்தம் சிதறச் செய்தது. புலிகள் பதுங்கின தங்கள் வாழ்விடங்களைக் காப்பாற்றிக் கொள்ள. அதில் மான்களையும் தன் இனமாக கருதி அருகில் இருத்திக் கொண்டன. புலிகள் பாயும் தருணங்களில் மான்கள் சிங்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு புலிகளின் தொடர் அழிப்பிற்கு சாட்சியாய் நின்றன.
இரண்டாம் கோடையில் இரவு 05 ல் துயரத்தின் நீண்ட வரலாறு மழைக்காலத்திற்குள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை கோடையின் மூலம் எதிர்ப்பு அடையாளமாக காட்டுகிறார். தனது சித்திரத்தை வெயிலால் நிறைக்கிறார். அதே கோடையின் இரவு 06 ல் மஜீத்தின் கவிதைச் சித்திரம் இவ்வாறாக விரிகிறது.
குழந்தைகள் பிசாசுகளை அழைக்கும்படி கேட்கிறார்கள்எங்களிடமுள்ள பழங்கதையன்றில் பிசாசுகள் ரத்தம் குடிக்கும் என்ற செய்தி அவர்களை நம்பிக்கையூட்டிருக்கக் கூடும்பிசாசுகள் வருவதாக நான் அறிவித்தேன் குழந்தைகள் மீட்பர் வருவதாககுதூகலப்பட்டனர்.நான் பிசாசு என்றுதான் அறிவித்தேன்அந்தச் சொல்லுக்கானஇன்றைய நாளின் பொருளைஅவர்கள் அறியாதிருக்கக்கூடும்எனினும் அவர்களின் சந்தோசத்தை கலைக்க விரும்பவில்லை என்கிறார்.
இவர் பிசாசு என்று புலிகளைச் சொன்னால் அவரது சந்ததியினர் மீட்பர் என்றே புலிகளை நினைக்கிறார்கள். காரணம் சிங்கள பேரினவாதத்தின் முழு தமிழ் இன அழிப்பை கண்ணெதிரே பார்க்கும் இஸ்லாமியர்களும் இருப்பதை மஜீத் ஒப்புக்கொள்கிறார். அவர் கண்களுக்கு மட்டும் தமிழ் இன அழிப்பு புலப்படவில்லை. சிங்களவர்களின் இன அழித்தலின் தொடர்ச்சி தங்களை நோக்கி நீளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இஸ்லாமிய இளம் தலமுறையினர் உணர்ந்தே இருக்கிறார்கள். இதனால் மஜீத் பிசாசுகளாக குறிப்பிடும் மீட்பரை குழந்தைகள் விரும்பி அழைக்கிறார்கள். இந்த கவிதையிலிருந்து மஜீத்தும் முன்பு புலிகளை மீட்பராக நினைத்த வரலாறும் உண்டு என்றே தெரிகிறது. அதன்பின் அவரது கருத்தில் மாறுபாடு நிகழ்ந்ததை அவர் அறிந்ததாகவே இருக்கட்டும்.
மஜீத்தின் கோடை இரவின் சித்திரங்கள் உண்மை வரலாறு தாண்டி மிகைப்படுத்தப்பட்ட வர்ணங்களை உபயோகித்து இருப்பதாகவேதோன்றுகிறது. கவிதை என்று பார்க்கும் மஜீத் இந்த தொகுப்பில் மிகப்பெரும் ஆளுமையை, புது வாசிப்பு தளத்தை உருவாக்கி இருக்கிறார்.கருத்தியல் ரீதியாக எண்ணளவில் மிகைப்படுத்தப்பட்ட சித்திரமாகவே இது தோன்றுகிறது.
ஒரு வரலாற்று பதிவை ஒரு இனத்திற்கான கண்ணீரை, துரோகத்தை பதிவு செய்யும் போது கவிதைக்கான செலுமை அழகியலைத் தாண்டி எல்லாத் தர்க்க நியாயங்களுக்குமான தெளிவுகளோடு பதிவு செய்தல் படைப்பின் நேர்மை. மஜீத் ஒரு இஸ்லாமியராக இந்தப் பதிவை செய்திருக்கிறார் தமிழ் மொழியில். அதனால் அவரை ஒரு தமிழ் கவிஞராகவே பார்க்க இயலுகிறது. இவர் ஒரு தமிழனாக கவிதை எழுதும் போது இன்னும் நியாயமான படைப்புகளை உண்மையின் முழுச் செறிவோடு இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
இன்றைய நிலையில் வன்னி முகாம்களில் சிங்களர்கள் நடத்தும் வன் கொடூரம், பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை உயிரோடு புதைத்த மனித பேரவலம் மஜீத்திற்குள் என்ன தாக்கங்களையும், என்ன விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கும்? ஒரு தமிழ் கவிஞராக மஜீத் தமிழ் இன அவலங்களுக்கான இன்னொரு கோடைகாலச் சித்திரத்தை வரைவாரா?